2025 ஜூலை 23, புதன்கிழமை

‘ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து எதுவும் தெரியாது’

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து எதுவும் தெரியாது என வட மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கரைச்சிக் கிளையின் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது.

இதன்போது, தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ப.அரியரத்தினம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சராக இருந்த த.குருகுலராஜா எவ்வித குற்றங்களும் செய்யவில்லை என்றும் ஆனால், அரியரத்தினம் அவருக்கு எதிராகச் செயற்பட்டதோடு, வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல்களை விசாரித்த விசாரணைகுழு முன்தோன்றி குருகுலராஜாவுக்கு எதிராக ஆதாரங்களுடன் சாட்சியமளித்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் எனத் தெரிவித்தே   ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

“இது சம்மந்தமாக எனக்கு எதுவும் தெரியாது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஏற்பாட்டிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டிருக்க வேண்டும். கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மீது நான் எந்த இடத்திலும் முறைப்பாடு பதிவு செய்யவில்லை. விசாரணைக் குழுவின் அழைப்பின் பேரில் அவர்களின் ஒரு கேள்விக்கு மாத்திரமே பதிலளித்தேன். அதாவது, யூனியன் கல்லூரி அதிபர் நியமனம் சரியா என என்னிடம் வினவினார்கள். அதற்கான எனது கல்விச் சேவை அனுபவத்தின் அடிப்படையில் விளக்கம் அளித்தேன். முறைப்பாடு செய்தது என்பது வேறு. விசாரணைக்குழுவுக்கு இருந்த சந்தேகத்தை அவர்களின் அழைப்பின் பேரில் தீர்ப்பதற்காக சாட்சியமளிப்பது என்பது வேறு. அதனை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் சாட்சியமளித்தமை தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் ஆகியோருக்கு விளக்கம் அளித்திருக்கிறேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .