2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் தாக்குதல்

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று (09) காலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர்கள் ஆலயம் மீது கற்களினால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

 

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக, மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில், கடந்த வியாழக்கிழமை (06)  காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி  எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற பதிவாளர், குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு, அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (07) பகல், குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திரண்டு வந்து, குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களையும் உடைத்ததோடு, அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்ற குறித்த நபர்கள், அவ்வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

இதனால், கடந்த சில தினங்களாக கருசல் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த முஸ்ஸிம்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

மக்களினால் அடையாளம் காணப்பட்ட வன்முறையை தூண்டி விட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை மக்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்த போதும் அரசியல் அழுத்தம் காரணமாக குறித்த நபரை பொலிஸார் விடுவித்துள்ளதாக, கரிசல் கிராம மக்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்.

இந்தநிலையில், பலத்த பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில், இன்று (09) காலை கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டபோது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை நிலவியது.

இதையடுத்து,  கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு நூற்றுக் கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சர்க உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, நிலைமையை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், வன்முறையை தூண்டி விட்டவர்களை முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கருசல் மற்றும் பெரிய கருசல் கிராமங்களில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .