Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 18 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு வகையான காணிப் பிரச்சினைகளுக்கும் ஆறு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இந்த உறுதிமொழியை வழங்கினார்.
வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் அடையாளப்படுது்தப்பட்டு விடுவிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் தொடர்பாக அங்கு கலந்துரையாடப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் ஒரு வரன்முறையின்றி காணிகளைக் கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும், காணிகளை கையகப்படுத்துதல் மற்றும் விடுவித்தல் என்பன தொடர்பான உறுதியான கொள்கைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை என்று சுமந்திரன் இங்கு குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறு ஒரு கொள்கையின்றி செயற்படுவதாகக் குறிப்பிட முடியாது என்றும், ஜனாதிபதி மற்றும் காணியமைச்சர், காணி ஆணையாளர் ஆகியோருடன் கலந்துரையாடி இந்தக் காணிப் பிரச்சினைகளுக்குத் தம்மால் தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் பெரும்பாலான மக்களிடம் காணி உறுதிகள் கிடையாது என்றும், அனுமதிப் பத்திரங்களுடன் மட்டுமே அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டிய சிறிதரனுக்குப் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா, விரைவில் காணிக் கச்சேரிகள் நடாத்தப்பட்டு துரித கதியில் காணி உறுதிகள் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஏற்கெனவே, கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கைத்தொழில் முயற்சிகளுக்கென விடுவிக்கப்படத் தேவையான காணிகள் தொடர்பான பட்டியல் ஒன்று மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரனால் தயாரித்தளிக்கப்பட்டு, டக்ளஸ் தேவானந்தா அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இதன்போது, இந்தக் காணிப் பிரச்சினைகளை உடனடியாக களத்தில் சென்று ஆராய்ந்து தீர்த்துவைக்குமாறு காணியமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன்படி, வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள்களின் உயரதிகாரிகள் கிளிநொச்சிக்கு வருகை தந்து விடுவிக்கப்படவேண்டும் என்று கோரப்பட்ட காணிகளுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டு அவற்றை விடுவிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
பொன்னகர், அக்கராயன், ஆனைவிழுந்தான், கண்ணகைபுரம், வன்னேரிக்குளம், ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, பண்டிவெட்டி, திக்குவயல், பள்ளிக்குடா, புன்னைநீராவி, கோவில்வயல், கண்டாவளை, கல்மடுநகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளே இவ்வாறு திணைக்கள அதிகாரிகளால் நேரில் சென்று பார்வையிடப்பட்டன.
இதுதொடர்பான விரிவான விளக்கத்தை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருலிங்கநாதன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் புள்ளிவிபரங்களோடு வழங்கியிருந்தார்.
இந்தக் களப் பயணத்தில் பார்வையிடப்பட்ட காணிகளில் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளவை பற்றியும், ஏனையவற்றை விடுவிப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது அவர் விளக்கிக் கூறியிருந்தார்.
இதுதொடர்பான கலந்துரையாடலின்போதே மேற்படி காணிகளில் சாத்தியமானவற்றை ஆறு மாதங்களுககுள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஏனைய காணி தொடர்பான பிரச்சினைகளுக்கும் இ்தே காலப்பகுதிக்குள் தீர்வு காணப்படும் என்று டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்-
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
45 minute ago
3 hours ago