2025 ஜூலை 05, சனிக்கிழமை

சதொச விற்பனை நிலையங்கள் 6 மாதங்களுள் கணினிமயம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாடளாவிய ரீதியில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களை, இன்னும் ஆறு மாதங்களில் கணினி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் சதொச நிலையங்களின் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை (13) தெரிவித்தார

சதொச ஊழியர்களுக்கும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கும், இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

லங்கா சதொச நிறுவனத் தலைவர் ரொஹாந்த அத்துகோரல, சதொச முகாமைத்துவ நிபுணரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியகட்சருமான பிரேம்லால் ரணகல ஆகியோர் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது,

'சிங்கப்பூரில் நடைமுறையில் இருக்கும் 'பெயார் பிரைஸ் எக்ஸ்ட்ரா'வைப் போன்று, நமது நாட்டிலும் புகையிரத நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 'மினி மார்கட்'களை அமைக்கவுள்ளோம். அதன் மூலம் சாதாரண விலைக்கு பொருட்களை வழங்க முடியும்.
அரசாங்கத்தினால் விலைகள் நிர்ணயிக்கப்பட்ட 15 அத்தியாவசியப் பொருட்களையும் இந்த நிலையங்களில் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்படும். இதன் மூலம், நுகர்வோரின் சிரமங்களையும் கஷ்டங்களையும் குறைக்க முடியுமென நம்புகின்றேன்.

சதொச பணியாளர்கள் மிகவும் நேர்மையுடன் செயற்பட வேண்டும். தாங்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு ஏற்றவகையில், மனச்சாட்சியுடன் பணியாற்ற வேண்டும். சதொச நிறுவனத்தை தனது சொந்த நிறுவனமாக நேசித்து அர்ப்பணிப்புடன் செயற்படுதல் வேண்டும். மக்களே எஜமானர்கள் என்பதை மனதில் இருத்தி கடமை புரிவதன் மூலம் இந்த நிறுவனத்தை முன்னேற்ற முடியும்.

கடந்த காலங்களில் இந்த நிறுவனத்தில் மோசடிகளும், ஊழல்களும் இடம்பெற்றன. புதிய அரசாங்கத்தில் எனது அமைச்சுக்கு கீழ் இந்த சதொச நிறுவனம் கொண்டுவரப்பட்டது. பாரிய நட்டத்தில் இயங்கிய சதொச நிறுவனத்தை படிப்படியாக நட்டத்திலிருந்து விடுவித்து தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம். இவ்வாறான முயற்சிக்கு ஒத்துழைத்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .