2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

சிறுநீரக நோயாளர்கள்: முல்லைத்தீவுக்கு முதலிடம்

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

வட மாகாணத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகமான நோயாளர்கள் உள்ளனர். அதிலும், துணுக்காய், மாந்தைக் கிழக்கு, வெலிஓயா ஆகிய  பிரதேச செயலக பிரிவுகளிலேயே அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து பணிமனை வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கடந்த 2016ஆம் ஆண்டு துணுக்காய், மாந்தைக் கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 3,680 பேருக்கு மேற்கொண்ட சிறுநீரக நோய் பரிசோதனை நடவடிக்கையில் 342 பேருக்கு நோய் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

“இவர்களில் 19 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

“சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு அரசாங்கம் அதி கூடிய சுகாதார வைத்திய வசதிகளை ஏற்படுத்தி வழங்கி வருகின்றது. இவர்களுக்கு 3,000 ரூபாய் நிதி உதவி வழங்கி வந்த நிலையில், தற்போது அதனை நடப்பாண்டில் இருந்து அதனை 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

“இவ்வாறான நிலையில், நோய் தாக்கம் காரணமாக முல்லைத்தீவில் இருந்து மாவட்ட ரீதியாக 2 சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வாராந்தம், மாதாந்தம் குருதி சுத்திகரிப்பு சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் சென்று வந்த சுமார் 52 பேருக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

“துணுக்காய், மாந்தைக் கிழக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும், ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை 680 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக நோய் பரிசோதனையின் போது, 55 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 35 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வாழும் 16,972 பேரிடம் இந்த நோய்க்கான ஆரம்ப பரிசோதனையை மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் விசேட வைத்திய அணியினர் களமிறங்கியுள்ளனர்.

“இவர்கள் கடமை நாட்களில் வீடு வீடாகச் சென்று சிறுநீர் மாதிரிகளையும் இரத்த மாதிரிகளையும் சேகரித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இலவசமாக நடை பெற்று வரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நோய் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதன் மூலம், ஆரம்ப நிலையில் உள்ள நோயாளர்கள் சிகிச்சை மூலம் முற்றாக விடுபடுவதுடன், நோய் தாக்கம் அதிகமாக உள்ளவர்கள் தொடர் சிகிச்சை மூலம் நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தி நீண்ட காலம் வாழ முடியும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .