2025 ஜூலை 02, புதன்கிழமை

தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளை வன இலாகா சுவீகரிக்கிறது

Princiya Dixci   / 2015 நவம்பர் 08 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

வவுனியாவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளையும் காணி அனுமதிப்பத்திரம் இல்லாத காணிகளையும் தமது திணைக்களத்துக்கு உரித்துடைய காணிகள் எனக்கூறி வன இலாகா திணைக்களம் சுவீகரித்து வருவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

வவுனியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளுக்கு முறைப்படியான உறுதிப்பத்திரங்கள் காணப்படவில்லை. நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக அவற்றுக்கு முறைப்படியான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடுகள் தவறவிடப்பட்டுள்ளன. எனினும், குறித்த காணிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகளென எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அது மட்டுமன்றி மக்களுக்குச் சொந்தமான அக்காணிகளுக்கு  மிகவிரைவாக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னரும் கூட, நீண்ட காலமாக மக்கள் குடியிருந்துவரும் அக்காணிகளை தமது திணைக்களத்துக்கு உரித்துடையவை என்று தெரிவிக்கும் வன இலாகாவினர், எல்லைக்கற்கள் நாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பிரதேச செயலாளர்களின் உத்தரவுகளையும் மீறி இவ்வாறு எல்லையிடப்படும் வலயங்களுக்குள் பொதுமக்களின் வயல் காணிகளும் பயிர்ச்செய்கை காணிகளும் உள்ளடங்குகின்றன. அக்காணிகளில் பல வருடங்களுக்கு முன்பே அம்மக்கள் நாட்டி வைத்து, இன்று பயன்தரும் தென்னை, பனை மற்றும் பழ மரங்களும் உள்ளன. மக்கள் தமது சக்திக்கு உட்பட்டு கட்டிய பெறுமதியான வீடுகள் மற்றும் கிணறுகளும் உள்ளன. இன்று அக்காணிகளிலிருந்து அம்மக்களை வெளியேற்றுவது என்பது எவ்வாறு நியாயமான நடவடிக்கையாகும்? அதுமட்டுமன்றி நல்லாட்சி எனக் கூறப்படும் புதிய ஆட்சிக்கும் எவ்வாறு பொருத்தமுடைதாகும்? இச்செயற்பாடு எம்மக்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் ஓர் அநீதியாகவே நாம் நோக்குகின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .