2025 மே 07, புதன்கிழமை

தவிசாளராக இருந்து நீக்கப்பட்ட முஜாஹிர் மீண்டும் பதவியேற்கிறார்

Niroshini   / 2021 நவம்பர் 15 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினராகவும் சபையின் தவிசாளராகவும் இருந்து நீக்கப்பட்ட சாகுல் கமீது முகம்மது முஜாஹிர், மீண்டும் தனது பொறுப்புகளை ஏற்க இருக்கின்றார்.

 வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸால், "மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில்,  அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும்போது குற்றங்களை புரிந்துள்ளார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இருக்கின்றன" எனத் தெரிவித்து, தவிசாளர் மற்றும் சபை அங்கத்துவர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக, செப்டெம்பர் 13ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது.
 

இந்நிலையில், வடமாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து எஸ்.எச்.எம்.முஜாஹினால் கொழும்பு மேல் நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த்து.

இந்நிலையில், மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, செப்டெம்பர் 29ஆம் திகதி நடைபெற்றது. அப்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வசம் திரும்பியிருந்தது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் ஒரு வாக்கு வித்தியாசத்தால் மன்னார் பிரதேச சபை தவிசாளராக அப்பொழுது தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (3) (ஆ)ஆம் பிரிவின்படி விடயப் பொறுப்பு அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டு, 2018.10.24ஆம் திகதி முதலாவது வட மாகாண சபை காலாவதியானதன் பேரில், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் 2ஆம் பிரிவினூடாக, எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வட மாகாண ஆளுநராகிய ஜீவன் தியாகராஜா ஆகிய நான் ஓய்வுபெற்ற நீதி அலுவலர் திரு கந்தையா அரியநாயகம் அவர்களின் கீழ் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரனைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர் அவர்களை, மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதிவியிலிருந்து தீர்மானித்து வெளியிடப்பட்ட 2021.09.13ஆம் திகதிய வர்த்தமான அறிவித்தலை இரத்து செய்கின்றேன் எனக் குறிப்பிட்டு, வடமாகாணம் ஆளுநர் ஜீவன் தியாகராஜா இம்மாதம் 10ஆம் திகதி, புதன்கிழமை, வர்த்தமான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாகுல் கமீது முகம்மது முஜாஹிர், தனது பதவியை மீண்டும்,  பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X