2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

நந்தி கடலில் நீர்மட்டத்தில் வீழ்ச்சி: ‘4,800 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு’

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - நந்தி கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“முல்லைத்தீவு – முத்தையன் கட்டுக் குளம் உட்பட காட்டாற்று வெள்ளம் நந்தி கடல் ஊடாகவே பெருங்கடலைக் கலக்கின்றது. கடந்த முப்பது ஆண்டுகளாக போர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அரண்கள் மற்றும் நீரோட்டத்தினால் கொண்டு வரப்பட்ட மணல் அனைத்தும் நந்தி கடலை நிரப்பி உள்ளன.

“இந்நிலையிலேயே, கடந்த ஏழு ஆண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில், நந்திக் கடல் சேறு நிறைந்துள்ளது. மீன்பிடியில் ஈடுபடுவதில் நெருக்கடி உள்ளது. நீர் மட்டம் குறைவாகக் காணப்படுவதன் காரணமாக கடல் உயிரினங்களின் பெருக்கம் குறைந்து காணப்படுகின்றது. எனவே, நந்தி கடலில் இருந்து சேற்றை அகற்றி ஆழமாக்குமாறு, தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

“ஆனால், இதுவரை அப்பணி தொடங்கப்படவில்லை. தற்போது. ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, நந்தி கடல் நீர் வற்றி சேறாகக் காணப்படுகின்றது. நந்திக் கடல் ஆழமாக்கப்பட்டால் இவ்வாறான நிலைமைகள் உருவாகாது.

“நந்திக் கடலை நம்பியுள்ள வற்றாப்பளை, நீராவிப்பிட்டி, கேப்பாப்புலவு, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, அம்பலவன்பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், செல்வபுரம் மற்றும் வட்டுவாகல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4,800இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

“எனவே, நந்தி கடலை நம்பியுள்ள குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .