2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘நல்லாட்சி மீது நம்பிக்கையுள்ளது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“நல்லாட்சி மீது நம்பிக்கையுள்ளது. எமது நம்பிக்கை வீண் போகாது” என தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இரணைதீவுப் பகுதியை விடுவிக்குமாறு கோரி, இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் 106 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டு மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கிளிநொச்சியில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதோடு, போராட்டத்தில் 50ஆவது நாளில் ஏ-32 வீதியை வழிமறித்து வீதிமறியல் போராட்டத்திலும் இம்மக்கள் ஈடுபட்டனர். இதேவேளை 100ஆவது நாளில் கொழும்பில், போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

“பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்த போதும், நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வேலைகளை முன்னெடுத்து வருகின்றது.

தொடர்ந்து 20, 25 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலங்களைக் கூட விடுவித்து அங்கு மக்களை மீள்குடியேற்றி வருகின்றது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் மீது நம்பிக்கையுள்ளது. எங்களின் நம்பிக்கைகள், ஆசைகள் வீண்போகாது. எங்களது நிலத்தை இந்த நல்லாட்சி அரசாங்கம் விடுவிக்குமென்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

கடந்த ஆட்சியின் போது, பல அரசியல்வாதிகள் எங்கள் நிலத்தை கேட்கவேண்டாம் என்று கூறினார்கள். நாங்கள் எங்கள் நிலத்தில்தான் தொழில் செய்து நிம்மதியாக வாழ்ந்தோம். எவரிடமும் கையேந்தவில்லை. இன்று இந்த இடத்திலே எவர் வருவார், எதைத் தருவார்கள் என்று பார்த்திருக்கின்றோம்.

எனவே எங்கள் நிலத்தை விடுவித்து அங்கே குடியேறி நிம்மதியாக வாழ்வதற்கும் தொழில் செய்வதற்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் வழிவகை செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .