2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘விரைவில் காணிகள் விடுவிக்கப்படும்’

Editorial   / 2017 ஜூலை 10 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

கேப்பாப்புலவு மக்களுக்குச் சொந்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என, வட மாகாண சபை முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிலையில், மாவட்டச் செயலகம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்திருந்தனர். இதன்போது, மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மேற்கூறப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், காணி விடுவிப்புத் தொடர்பாக, தான் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடியதாகவும், காணிகள் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் முகாம் பொறுப்பதிகாரி இடமாற்றம் பெற்றுச் சென்றமையின் காரணமாகவே, காணிகள் விடுவிப்பு விடயத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டதாகவும் தற்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு, காணிகளை, விரைவில் விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

இதேவேளை, இக்காணி விடுவிப்புத் தொடர்பாக, புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவுடனும் தான் உரையாடியதாக, முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முதலமைச்சருடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாண சபை அமைச்சர் பா. டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் மக்களைச் சந்தித்திருந்தனர்.

138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு, கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டுவருகின்ற தொடர் போராட்டம் நேற்றுடன் 132ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது சொந்த நிலங்களில் கால்பந்திக்கும் நோக்கோடு, இவ்வாண்டு மார்ச் முதலாம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த மக்கள், தீர்வு கிடைக்கும் வரை, போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகத் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .