Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:32 - 1 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வடக்கு மாகாணத்தில், தன்னால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டப் பணிகளுக்குத் தடங்கலை ஏற்படுத்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முயல்கிறது என, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவில், அவரது அமைச்சால் நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவையின் போதே, இக்கருத்துகளை அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர், வடக்கில் காணப்படும் வீடமைப்புத் திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோ, வடக்கில் காணப்படும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, தான் தயாராகவே இருக்கிறாரெனவும், கூட்டமைப்பினரே அதற்குத் தடையாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக, தன்னால் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தைத் தன்னிடமிருந்து பறித்து, வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் கையளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனும், பிரதமரிடம் கடிதமொன்றை வழங்கியுள்ளனர் என, அவர் குற்றஞ்சாட்டினார்.
அவ்வாறு அவர்கள் கடிதம் வழங்கினார்களா என்பதை, செல்வம் எம்.பியும், மாகாண அமைச்சர் சிவநேசனும், தமது தலைமைகளிடமும் பேச்சாளரிடமும் கோர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
“ இந்த வீடுகட்டும் பொறுப்பை, மனோ கணேசனிடமிருந்து பறித்து எடுத்து, பழைய அமைச்சர், மூன்று ஆண்டுகளாக வீடு கட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் சுவாமிநாதனிடம் வழங்குங்கள் என்று கூறினார்களா என்று கேளுங்கள். கடந்த காலங்களில், வீடு கட்டவில்லை; பொருத்து வீடு பொருந்தாத வீடு என்று சொல்லி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பேச்சாளரும் ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறைசொன்னார்கள், குற்றம் சொன்னார்கள்.
“இப்போது பார்த்தால், நான் வீடுகட்ட வருகிறேன்; நான் தயாராக இருக்கிறேன். இங்கு வாழும் மக்கள், எனது உறவுகள். கடந்த காலங்களில் கட்டப்படாத வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, விட்ட இடத்தில் தொடர்ந்து செய்ய முன்வரும் மனோ கணேசனை, வீடு கட்ட வேண்டாம்; சுவாமிநாதனிடம் வீடுகளைக் கட்டக் கொடுங்கள் என்று சொல்வார்களேயானால், என்ன முரண்பாடு இது?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, வட மாகாணத்தில் வீடுகள் கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அமைச்சர், “அரசாங்கத்தின் பங்காளி என்றவகையில், கூட்டுப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று, அக்குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டார்.
அதேபோன்று, முழு நாட்டுக்குமான அமைச்சராகவே தான் உள்ளாரெனவும், தான் வடக்குக்கும் கிழக்குக்கும் வரக் கூடாது என்றவாறான முட்டுக்கட்டைகளை யாரும் விதிக்க முடியாது எனவும், அமைச்சர் மனோ, இங்கு குறிப்பிட்டார். குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், அவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார் என்று குறிப்பிட்ட அமைச்சர் மனோ, “அவரைப் பார்த்ததே கிடையாது” என்று, தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
இதேவேளை, தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுக்கப் போவதில்லையென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் உறுதிபடக் கூறியுள்ளமையை ஞாபகப்படுத்திய அமைச்சர், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகிறது எனத் தெரிவித்ததோடு, தேசிய நல்லிணக்கம் அல்லது ஒருமைப்பாடு என்ற பாதையில் சென்றாலோ, அல்லது வடக்குக்கு ஜனாதிபதி வந்து, தேசிய ஐக்கியத்தைப் பற்றிப் பேசினாலோ, தேசிய ஐக்கியம் வந்துவிடாது என்று கூறினார். மாறாக, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியன வர வேண்டுமானால், அனைத்திலும் சமத்துவம் வர வேண்டுமெனவும், எங்கெங்கு குறைகள் இருக்கின்றனவே, அக்குறைகளைக் கண்டுபிடித்து, அவற்றைத் தீர்க்கும் போது தான் சமத்துவம் உருவாகுமெனவும், அதையே, தனது அமைச்சின் மூலம் மேற்கொள்ள முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மனோ கணேசனின் குற்றச்சாட்டுத் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக, கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுபற்றிய செய்தி பிரசுரமானதன் பின்னர், அதற்கான பதிலை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
வ.ஐ.ச.ஜெயபாலன் Monday, 27 August 2018 06:55 AM
தோழர் மனோ கணேசனும் கூட்டமைப்பும் சந்தித்துப் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.. இல்லையேல் இனம் தெரியாத பகைமையே வளரும். வடமாகாணத்தைக் கட்டி எழுப்புவதில் முதன்மைப்பங்கு வகிக்கும் மலையக மக்களின் தவிர்க்க முடியாத பாத்திரத்தை நாம் இனியேனும் அங்கிகரிக்க முன்வரவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago