2025 ஜூலை 05, சனிக்கிழமை

"இராணுவத்தை தக்கவைக்கவே ஆயுத மீட்பு நாடகம்"

Menaka Mookandi   / 2016 ஜூலை 05 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான இராணுவத்தை, அங்கு  தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அண்மைக் காலமாக ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்.

சுண்டிக்குளம் காட்டுப் பகுதியிலிருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்ட, 4 ஆர்.பி.ஜி ரக எறிகணைக் குண்டுகள் புதியவை போன்று காணப்படுவதாகத் தெரிவிக்கும் சிறிதரன் எம்.பி, அவை தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்ற படையினரின் தகவலை  நம்பமுடியாதுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ளஇராணுவம், பொலிஸார் மற்றும் உளவுப் படையினர் இணைந்தே இவ்வாறான குண்டுகளை வைக்கும் தந்திரோபாயங்களை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும், தமிழருடைய நிலங்களை மெல்ல மெல்ல கபளீகரம் செய்வதற்கும் அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின்னர், எந்தவொரு யுத்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு சம்பவங்களும் அரசாங்கத்தினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், மிக மிக ஆபத்தான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான குண்டுகளை மீட்பது போன்ற பாசாங்கு காட்டும் முயற்சிகள், தமிழர்களை வேறோடு அழிப்பதற்கான முயற்சி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் குண்டுகள், ஷெல்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்படுவதாக புதிய புதிய செய்திகள் உருவாகிக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .