2025 ஜூலை 02, புதன்கிழமை

காணி அமைச்சின் உத்தரவை அரச அதிகாரிகள் மூடிமறைத்துள்ளனர்

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

மகாவலி அதிகார சபையினால் பறிக்கப்பட்ட முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மக்களின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய காணி அமைச்சு எழுத்து மூலமாக கொடுத்த உத்தரவை மாவட்டச் செயலகம், மற்றும் பிரதேச செயலகம் ஆகியன மூடி மறைத்துள்ளதாக கொக்குத்தொடுவாய் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள கிராமங்களிலில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 2009ஆம் ஆண்டில் போர் நிறைவடைந்த பின்னர், மீள்க்குடியேறினர். இந்நிலையில், அவர்களுக்கு சொந்தமான சுமார் 2157 ஏக்கர் வயல் காணிகள்; மகாவலி அதிகார சபையின் (எல்) வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு, அதில் பெரும் பகுதி பெரும்பான்மையின மக்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

தமது  நிலங்கள் அபகரிக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மட்டங்களில் தமது காணிகளை பெற்றுக் கொடுக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்திருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடந்த 2015.06.12ஆம், 13ஆம் திகதிகளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற காணி பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கான நடமாடும் சேவையில் இவ்விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, 2015.06.16ஆம் திகதி மத்திய காணி அமைச்சு, கொக்குத்தொடுவாய் மக்களின் காணி பிணக்குகளை மாவட்டச் செயலகம் (முல்லைத்தீவு), கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோர் இணைந்து தீர்த்து வைக்குமாறும் இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக தமக்கு தெளிவூட்டல்களை வழங்குமாறும் கடிதம் மூலம் அறிவுறித்தியிருந்தது.

மேலும், மகாவலி அதிகார சபையுடன் பேசி, இவ்விடயத்தை தீர்க்குமாறும் மத்திய காணி அமைச்சு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்டச் செயலகமோ, பிரதேச செயலகமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, இவ்வாறான கடிதம் கிடைக்கப் பெற்றதை அவை மூடி மறைத்துள்ளன.

மேற்படி விடயம் தொடர்பாக வியாழக்கிழமை(02) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் வினவிய போது,

'இந்த கடிதம் தொடர்பாக நான் கேட்டிருக்கின்றேன். இந்நிலையில், அந்த சபையில் இருந்த அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர் அவ்வாறான கடிதம் ஒன்று தமக்கு கிடைக்கப் பெற்றதாக காட்டிக் கொள்ளாமல், அரசாங்க அதிபர் என்னிடம் அந்த கடிதத்தின் பிரதி ஒன்றை கேட்டிருக்கின்றார்.

ஒட்டுமொத்தமாக கொக்குத்தொடுவாய் மக்களின் நிலம் பறிக்கப்பட்ட விடயத்தில் பொறுப்பற்றவர்களாகவே எமது அரசாங்க அதிகாரிகள் மற்றும் திணைக்களங்கள் செயற்பட்டிருக்கின்றனர்.

இந்த கடிதம் மாகாண காணி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த கடிதத்தின் பிரதியை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு கையளிக்க தீர்மானித்திருக்கிறோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .