Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் சிவகாமி ஜெயக்குமரன், புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது, அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கவில்லை என, அவரது தாயார் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அந்தத் தாய், 'விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது, எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் இருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்த்தறியும் அமர்வின் போது சாட்சியமளித்த காணொளியைப் பார்த்தேன்' என்றார்.
'அத்துடன், இவ்விடயம் தொடர்பில், வடமாகாண சபை அமைச்சர் ஒருவர் கூறிய கருத்துக்களையும் தொலைக்காட்சியில் பார்வையிட நேர்ந்தது. அவர்கள் கூறியதைப் போன்று, எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கவில்லை என நான் கூறுகிறேன். நோய் இருந்த விடயத்தை, அவர்களால் நிரூபிக்க முடியுதா? எனது மகளுக்கு புற்றுநோய் இருந்த விடயத்தை, அவர்கள் ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை' எனவும் தமிழினியின் தாய் கேள்வி எழுப்பினார்.
இதன்போது, 'உங்கள் மகள் தமிழினி, விஷ ஊசி ஏற்றப்பட்டு தான் உயிரிழந்தார் எனக் கூறுகிறீர்களா?' என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அந்தத் தாய், 'எனது மகள், விஷ ஊசி ஏற்றப்பட்டு உயிரிழந்தாளா? அல்லது அல்லது யுத்தத்தின் பின்னர் புற்றுநோய் வந்துதான் உயிரிழந்தாளா? என, நான் வாதிடவில்லை. ஆனால், எனது மகள் தமிழினி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருநத காலத்தில், அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள, என்னால் மட்டுமல்ல, யாராலும் முடியாது' என்றார்.
'ஏனெனில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த காலத்தில், தமிழினிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தது என்ற கருத்தைப் பார்த்தால், கடந்த 2006ஆம் ஆண்டுக்கு முற்பகுதியில் தான், அவருக்கு அந்த நோய் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் உயிரிழந்தது, 2015ஆம் ஆண்டில்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், பூரண சிகிச்சையை உரிய முறையில் பெற்றிருந்தால் மாத்திரமே, அக்கொடிய நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். சில வேளைகளில் அதுவும் பயனளிப்பதில்லை. சிகிச்சை எதனையும் பெற்றுக்கொள்ளாத தமிழினி, ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தால் எவ்வாறு வருடக்கணக்கில் உயிருடன் இருந்திருப்பார்?' எனவும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
'அரசியல் இலாபங்களுக்காக, எங்களை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டாம். எனது மகள் இறந்துவிட்டாள். அதனை அப்படியே விட்டுவிடுங்கள். உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடாதீர்கள். சிறிய கடை அமைத்து, அதில் வரும் வருமானத்தில் நானும் எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழ்ந்து வருகின்றோம். பொய்யான தகவல்களை வெளியிட்டு, உடைந்து போயுள்ள எமது மனங்களை மீண்டும் மீண்டும் உடைக்காதீர்கள்' என, தமிழினியின் தாய், வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago