2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பயணிகளை இரவுவேளையில் நடுவீதியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சென்ற பயணிகளை இரவு ஒரு மணிக்கு நடுவீதியில் இறக்கி விட்ட தனியார் பஸ் நடத்துனர் வேறு பஸ்ஸில் பயணிகளை ஏறிச்செல்லுமாறு பணித்தமை பயணிகளிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வட மாகாண அமைச்சர் குற்றம் சாட்டினர்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லவிருந்த பயணிகள் வவுனியா தனியார் பஸ் தரிப்பிடத்தில் தரித்திருந்த வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துக்கு உட்பட்ட ராதிகா ரவல்ஸ் என்ற பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

இரவு 8 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்ட பஸ் 9 மணிக்கும் புறப்படாமல் இருந்த நிலையில் 9.15 மணியளவில் குறித்த பஸ்ஸின் நடத்துனர், பஸ்ஸில் இருந்த சுமார் 20 பயணிகளை பிறிதொரு பஸ்ஸூக்கான கிளிநொச்சி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் NPN- 6981 என்ற இலக்கமுடைய விதுசா ரவல்ஸ் பஸ்ஸில் பயணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் பயணிகள் இப் பஸ், வவுனியா கிளிநொச்சி என்ற பெயர்ப்பலகையுடன் காணப்படுகின்றது. அது எவ்வாறு யாழ்ப்பாணம் செல்லும் என கேட்டபொது அது செல்லும் நீங்கள் ஏறுகள் என நடத்துனர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், பயணிகள் அப் பஸ்ஸில் பயணித்த நிலையில் அப் பஸ் வவுனியாவில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கனகராயன்குளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் 30 நிமிடங்கள் வரை தரித்திருந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்து, பரந்தன் சந்தியில் இரவு ஒரு மணியளவில் நடத்துனர் பயணிகளை அனைவரையும் பஸ்ஸில் இருந்து இறங்குமாறும் அங்கு தரித்திருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏறி யாழ்ப்பாணம் செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.

இதனால் சினமடைந்த பயணிகள் நடத்துனருடன் முரண்பட்டதுடன், இது தொடர்பாக வட மாகாண போக்குவரத்து அமைச்சரிடம் தெரிவிப்போம் எனவும் கூறியுள்ளனர்.

எனினும் நடத்துனர் அமைச்சரை எதுவும் செய்யமுடியாது எனவும் அவரை தரக்குறைவாகவும் திட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவரிடம் கேட்டபோது,

இவ்விடயம் தொடர்பாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரித்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், நேர சூசியின் அடிப்படையில் மதியம் 12.30 மணிக்கு பின்னர் யாழ் நோக்கி செல்லும் பஸ்கள் யாழ்ப்பாணம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துக்கு உட்டபடாகவே இருப்பது வழமை. எனினும் நேற்றைய தினம் ராதிகா ரவல்ஸ் என்ற பஸ் வவுனியாவில் இருந்து யாழ்ப்பணாம் நோக்கி செல்வதற்காக இரவு நேரம் ஏன் தரித்திருந்தது என்பது தெரியாதுள்ளது.

அத்துடன், விதுசா ரவல்ஸ் கிளிநொச்சி பஸ் அதற்கு யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதி இல்லாத போதிலும் போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகராக உள்ள கபரகம என்பவர் தனது கையெழுத்திட்டு யாழ்ப்பாணம் செல்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

அது எவ்வாறு சாத்தியமானது என்பது தொடர்பில் நாம் அவருடன் கலந்துரையாடியிருந்தாலும் அவர் தனது அதிகாரத்துக்குட்பட்டு செய்வதாக கூறியுள்ளார். இவ்வாறான காரணங்களாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக வட மாகாண போக்குவரத்து அமைச்சரே கருத்து கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரனிடம் கேட்டபோது,

வவனியா மாவட்டத்தில் 12  பஸ்களுக்கு அனுமதி கேட்கும் நிலை காணப்படுகின்றது. அதன் காரணமாக தற்காலிக அனுமதியை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டும் இருந்தது. எனினும் ஆளுனரின் கையெழுத்திட்டு நியதிச்சட்டம் வந்தவுடன் இதற்கான தீர்வுகள் கிடைக்கும் என தெரிவித்தார். அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், இவ்விடயம் பிழையானது என கூறியதுடன். தான் நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த பஸ்ஸில் பயணித்த பயணியொருவரின் தொலைபேசி இலக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .