2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அங்காடி வியாபாரிகளுக்கு 3 மாத காலக்கெடு

Kanagaraj   / 2014 மார்ச் 08 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் அங்காடி வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் வழங்க முடியாது எனவும் அவர்கள் தற்போதுள்ள இடத்தில் இருந்து மூன்று மாத காலத்தில் தாமாக நிரந்தர இடத்தினை தேடி செல்ல வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் உள்ள அங்காடி வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என அங்காடி வியாபாரிகள் வட மாகாண முதலமைச்சருக்கு மனுவொன்றினை கையளித்திருந்த நிலையில் அவ் விடயம் தொடர்பாக அறிக்கையிடுவதற்காக வட மாகாண சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகர வரியிறுப்பளார் சங்க தலைவர் எஸ் சந்திரகுமார் தெரிவித்ததாவது,

வவுனியா நகர்ப்பகுதியில் பல இடங்களிலும் அங்காடி வியாபாரிகள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களால் வீதி போக்குவரத்துக்கு இடையூறு என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அண்மையில் பொழுதுபோக்கு கழகத்திற்கு சொந்தமான காணியொன்றினை வவுனியா நகரசபை வாடகை அடிப்படையில் பெற்று அங்காடி வியாபாரிகளுக்கு நிரந்த இடத்தினை வழங்கியிருந்தனர்.

எனினும் பொழுதுபோக்கு கழகத்தினருக்கு நகரசபையால் வாடகை வழங்கப்படாத நிலையிலும் கழகத்தின் விளையாட்டு அபிவிருத்தியின் பொருட்டும் அவ் இடத்தை மீள ஒப்படைக்குமாறு தற்போது பொழுதுபோக்கு கழக நிர்வாகிகள் நகரசபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை அங்காடி வியாபாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள இடம் வியாபாரத்திற்கு ஏற்ற இடமில்லை எனவும் தமக்கு மாற்று இடம் வழங்குமாறும் நகரசபை மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இதன் பிரகாரம் நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்த சமயம் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் குடியிருப்பு கித்துள் வீதியில் அங்காடி வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதற்கு பரிசீலிக்குமாறு நகரசபைக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

எனினும் அவ் இடம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமை மற்றும் போதிய இடவசதிகள் இன்மையுடன் சமூக பிரச்சனைகளை கொண்டுவரலாம் என தெரிவித்து குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

இந் நிலையில் நேற்று (7.3) வட மாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம்,

நகரசபை செயலாளர் ஆகியோருக்கிடையில் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் வவுனியாவில் அங்காடி வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் வழங்கப்படுவதை வர்த்தகர் சங்கமும் ஆட்சேபித்து வருவதன் காரணமாக அங்காடி வியாபாரிகளுக்கு தற்போதுள்ள இடத்தனை மூன்று மாதங்களே வழங்குவது எனவும் அது வரை காலமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீதியோரத்தல் வியாபாரம் செய்வதற்கு அனுமதிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அந்த மூன்று மாதத்திற்குள் இவ் வியாபாரிகள் தாமாக நிரந்தர கட்டிடத்தினை பெற்று வியாபாரம் செய்ய முடியுமே தவிர வேறு இடங்கள் நிரந்தர இடம் வழங்குவதில்லை எனவும் அவ்வாறு அவர்கள் நிரந்தர இடம் பெறாத பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்மாத்திரம் நகரில் வீதியோர வியாபாரத்தல் ஈடுபட அனுமதிப்பது எனவும் முடிவு எட்டப்பட்டது.

இதன் பிரகாரம் இம் முடிவுகள் வட மாகாண முதலமைச்சருக்கு வவுனியா நகரசபையினால் அறிக்கையாக அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தொவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .