2025 ஜூலை 17, வியாழக்கிழமை

155 பேர் மாத்திரமே விசாரணைகளுக்கு ஆஜர்: பரணகம.

George   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில்  காணாமல் போனோர் சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 155 பேர் மட்டுமே விசாரணைகளுக்கு ஆஜராகியிருந்ததாக, காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று(11) திங்கட்கிழமை வரை மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, மன்னார், மடு ஆகிய பிரதேசங்களில் நான்கு நாட்கள் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றன.

இன்று திங்கட்கிழமை(11) இடம்பெற்ற இறுதி நாள் விசாரணைகள் மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரனகம ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே; இதனை கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை மலர்ந்துள்ளது என்பது தெரிகின்றது. அத்துடன் அவர்கள் காணாமல் போனோரை கண்டு பிடிப்பதற்காகு தேவையான செய்திகளை எம்முன் தந்துள்ளனர்.

மாவட்டத்தில் ஒரு இலட்சத்து ஐம்பத்து நான்காயிரம் (154,000) பேர் காணாமல் போயுள்ளதாக எமக்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர். மன்னாரை பெருத்தவரையில் வாயால் தான் முறைப்பாட்டை சொல்கின்றார்கள். இதைத் தவிர மனுக்கள் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்டவில்லை.

மன்னாரில் காணாமல் போனோர் சம்மந்தமாக மனுக்கள் விண்ணப்பங்களை அனுப்பும் படி பத்திரிக்கைகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் சம்மந்தப்பட்டவர்கள் மூலம் அறிவிக்கும் படி அறிவித்தல்கள் கொடுத்திருந்தோம். ஆனால் இன்று வரைக்கும் கூறப்பட்ட தொகைக்கேற்ப விண்ணப்பங்களோ  மனுக்களோ எங்களுக்கு அனுப்பப்படவில்லை.

ஆனால் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மேற்கொண்ட கணக்கெடுப்பும் நாங்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது. மன்னாரில் பல சங்கங்கள் அமைப்புக்கள் சொன்ன கணக்கிற்கும் இதற்கும் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.

இருந்த போதும் காணாமல் போனவர்களின் தொகை அதிகரித்து இருக்குமாயின் அனுப்பிவைக்கும் பட்சத்தில் அதை கவனத்தில் எடுத்து அரசாங்கத்துடன் பேசி நல்லதொரு முடிவை எடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

இனிவரும் விண்ணப்பங்களை நாங்கள் பெறும்பொழுது அதை தட்டிக்கழிக்காமல் தக்க நடவடிக்கை எடுப்போம். இவ் விசாரணையில் குறைபாடுகள் பிரச்சினைகள் இருப்பதாக இதுவரைக்கும் எவரும் முறைப்பாடு செய்யவில்லை.

5,000 பெரும்பான்மையின மக்கள் காணாமல் போயிருப்பதாக எங்களுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இதில் அவர்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் தகப்பனின் முகம் தெரியாமல் இருக்கலாம்.

இப்பகுதியில் காணாமல் போன மக்களில் பெரும்பான்மையினத்தைச்சேர்ந்த 5000 பேரை கழித்தால் மிகுதியாக சுமார் 13,000 பேர் மட்டுமே கணாமல்போனோரின் பட்டியலில் இருந்தாலும் அதில் இறந்தவர்களின் கணக்கும் உள்ளாகியிருக்கும்.

எங்களுக்கு ஒரு முறைப்பாடு கிடைக்கப் பெற்றது. காணாமல் போனோரில் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர் என்று. வெளிநாட்டு அமைச்சிக்கும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் அவர்களுக்கென ஒரு சட்டம் உள்ளது.

அவர்களின் சட்டங்களுக்கமைய அங்கு அகதிகளாக தஞ்சம் புகந்தோரின் பெயர் விபரங்களை அவர்கள் எமக்கு தர மாட்டார்கள். ஆனால் இங்கு காணாமல் போனோர் சம்மந்தமாக அவர்களின் பெயர் விபரங்களை தரும் பட்சத்தில் வெளிநாடுகளில் சட்ட முறைப்படி பெற முயற்சிக்கலாம். இருந்தபோதும் வெளிநாடுகள் சட்ட முறைப்படி பெயர் விபரங்களை எமக்கு தருவதை தவிர்த்துக்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X