2025 ஜூலை 30, புதன்கிழமை

உணர்வுகளை அழிவுக்காக தூண்டும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும்: ரிசாட்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மக்களது உணர்வுகளை அழிவுக்காக  தூண்டும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பாள்புரம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஏன் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையிலும் பிரதேச அபிவிருத்திக்கு பொறுப்பானவன் என்பதினாலும் அனைத்துச் செயற்பாடுகளுக்கான அனுமதியினை நான் வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழை நேசிப்பவன். நான் தமிழர்களது தேவைகள், அபிலாஷைகளை நன்கு அறிந்தவன். எமது மக்களது எதிர்காலத்தை இல்லாமல் செய்யும் சக்திகளை வன்மையாகக் கண்டிப்பவன். எனவே உங்களது பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதனை எனது காலத்தில் செய்து தருவதற்கு செயற்பட்டு வருகின்றேன்.

மின்சாரம் இல்லாத எத்தனையோ கிராமங்களுக்கு அதனை பெற்றுத்தந்துள்ளோம். இன்னும் அதனை தருவதற்கு மின்சார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கி அந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதைகள் இன்று நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவின் உட்கட்டமைப்புக்கான பாதைகள், தூர சேவைகளுக்கான பாதைகள் எல்லாம் சிறந்த பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த அபிவிருத்திகள் மூலம் கிராமங்களும் மக்களும் நன்மையடைகின்றனர். இந்த நன்மைகளை அப்பாவிகளான எமது மக்கள் அனுபவிக்கக் கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. பசித்தவனுக்கு கொடுக்கப்பட வேண்டியது உணவு. ஆனால், அவனுக்கு அதை கொடுக்காமல் வெறும் உரிமை என்கின்ற வெறும் உணர்ச்சியினை கொடுத்தால் உரிமையினை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக உயிரை மாய்த்துக்கொள்ள நேரிடும். இதனை செய்ய வேண்டாம் என்று நாம் கேட்கின்றோம்.

மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்கு வந்தவர்கள், இம்மக்களுக்கு துன்பங்களும் துயரங்களும் தேவைகளும் வருகின்றபோது இங்கு வந்து அவற்றை பெற்றுக்கொடுக்காமல் வெறும் வெற்றறிக்கைகளை விடுத்து இன்னும் இந்த மக்களை அழிவுக்கு இட்டுச் செல்கின்றனர்' என்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .