2025 ஜூலை 23, புதன்கிழமை

காலவேகத்துக்கு ஈடுகொடுக்கும் கற்கைகளை கற்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 30 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

காலவேகத்துக்கு ஏற்ப ஈடுகொடுக்கக் கூடியவாறான கற்கைகளை மாணவர்கள் கற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மன்னார் பரிகாரிகண்டல் அ.த.க. பாடசாலையின் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வருடாந்த மெய்வன்மை போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவித்து சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'தகவல் தொழில்நுட்ப புரட்சி என்று சொல்லப்படுகின்ற காலத்துக்குள் நாங்கள் எல்லோரும் விரும்பியோ, விரும்பாமலோ பிரவேசித்து விட்டோம். உலகெல்லாம் பரந்து விரிந்து கொட்டிக்கிடக்கின்ற பல விடயங்களை சில நொடிப்பொழுதில் விரல் நுனிக்குள் கொண்டு வந்து தந்து விடும்.

அதனுடைய வேகத்துக்கேற்ப நம்மால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது மட்டும் உண்மை. இன்றே நிலைமை இப்படியென்றால் இனி வரப்போகின்ற காலங்கள் எப்படி இருக்கப்போகின்றன என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். கடந்த காலங்களில் எமது மண்ணில் நிலவிய போர்ச்சூழல், பொருளாதாரத்தடைகள் பல ஆயிரம் மாணவர்களை கலைத்துறை பாடங்களையே தேடி கற்க வைத்தது. உயிரியல் விஞ்ஞானம், அரசறிவியல், பௌதீக கணக்கீடு, இரசாயனவியல், கணினி தொழில்நுட்பம் போன்ற துறைகளை கற்பதற்கான தேர்ச்சிகள், அதற்கே உரித்தான அறிவுத்திறன் எமது மாணவர்களுக்கு நிறைந்தளவு இருந்தபோதிலும், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் திட்டமிட்டு தமிழ் கல்வித்துறை மீது ஏற்படுத்திய தடைகள், வளப்பங்கீடுகளில் காட்டிய பாரபட்ச மனோநிலை எல்லாமே ஒன்று சேர்ந்து செலுத்திய தாக்கங்கள் எமது மாணவர்களை அவர்களின் விருப்பத்துக்குரிய தெரிவுக்கு முரணான கற்களை கற்க வைத்தது.

இன்றும் எமது மண்ணில் நடைபெற்ற போராட்டங்களுக்கான காரணங்கள் அப்படியே இருந்தாலும், அதற்காக பல வழிகளில் இப்போதும் நாம் போராடிக்கொண்டிருந்தாலும், அந்த போராட்டங்களின் பயன் நம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு கிடைக்கின்ற ஆட்சி முறையை நிர்வகிக்கப்போவது மாணவர் சக்தி தான். எனவே கால வேகத்துக்கேற்ப ஈடுகொடுக்கக் கூடியவாறான கற்கைகளை எமது மண்ணின் மாணவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் கற்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் தன் குழந்தையாக உங்கள் ஒவ்வொருவரையும் தத்தெடுத்து விட்டதால் நிச்சயம் உங்கள் கற்கைகள் நிகழ்காலத்தில் சீவிக்கக்கூடியவாறு, எமது மண்ணை கட்டியெழுப்பத்தக்கவாறு அமைய வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .