.jpg)
-நவரத்தினம் கபில்நாத்
நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்யக்கூடாது என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா, சிதம்பரபுரத்தில் 1992ஆம் ஆண்டிலிருந்து தற்காலிக வாழ்விடங்களில் வாழ்ந்துவந்த உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் விருப்பமின்றி அவர்களை வேறு இடத்தில் குடியேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் இப்பகுதி மக்களுடன் நேற்று (30) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.
உள்ளக இடம்பெயர்வாலும் இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களுக்குமான இடைத்தங்கல் நலன்புரி முகாம்கள் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனத்தினால் 1994-95 காலப்பகுதியில் சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் அங்குள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் இன்னும் 180 குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி பாழடைந்த தற்காலிக முகாமிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை இவர்களது விருப்பத்திற்கு மாறாக வேறு இடங்களில் குடியேற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தாம் தொடர்ந்தும் சிதம்பரபுரத்திலேயே வாழவிரும்புவதாகவும் தமக்கு அதே இடத்தில் காணி வழங்குமாறும் மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அடுத்தவாரம் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடி நல்லதொரு முடிவு கிடைப்பதற்கு ஆவனசெய்வதாக தெரிவித்துள்ளேன் என குறிப்பிட்டார்.