2025 ஜூலை 23, புதன்கிழமை

மணல் அகழ்வை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், பேசாலை உட்பட தீவுப்பகுதிகளின்  கரையோரங்களில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கண்டித்தும் இதனை நிறுத்துமாறு கோரியும் பேசாலையில் அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேசாலை புனித வெற்றி நாயகி தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி நிறைவடைந்த பின்னர் அங்கு ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட  பதாகைகளை தாங்கியவாறு பேரணியாக  பேசாலை பஸார் பகுதியை சென்றடைந்தனர்.  அங்கு புனித ஞானப்பிரகாசியார் சிலைக்கு முன்பாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்,  தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் உட்பட பொலிஸார் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்தனர்.

இதேவேளை,  வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா, வைத்திய கலாநிதி என்.குணசீலன், மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டின் டயேஸ், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொன்சால் குலாஸ் ஆகியோரும் வருகை தந்தனர்.

இதனைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரிக்கும் மேற்படி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கிராம மக்கள் சார்பில் உடனடியாக  மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறு மேற்படி அதிகாரிகளுக்கு பணித்த  தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி, சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்கள் மீது தான் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மேலும்,   ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு  இவர் கோரியமைக்கு இணங்க ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .