2025 ஜூலை 23, புதன்கிழமை

சிறுமியை சுட்ட மாமனாருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 08 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரிப்பகுதியில் மருமகளான சிறுமியை நெருப்பால் சூடு வைத்து துன்புறுத்திய மாமனாரை 13 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்  எஸ்.விஜயராணி சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். 

கிளிநொச்சிப் பூநகரிப்பகுதியில் தாய் உயிரிழந்த நிலையில் மாமனாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த குறித்த சிறுமி கடந்த 29ஆம் திகதி நெருப்பினால் சூடு வைத்து துன்புறுத்தப்பட்டதாக  பொலிஸாருக்கும் சிறுவர் நன்னடைத்த அதிகாரிகளுக்கும் உறவினர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பூநகரிப் பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான மாமனாரை 31 ஆம் திகதி கைதுசெய்து, அன்றைய தினமே குறித்த சிறுமியையும் மாமனாரையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதிபதி குறித்த நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் பாதிக்கப்பட்ட  சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து குறித்த சிறுமியை பூநகரிப் பிரதேச சிறுவர் நன்னடைத்த அதிகாரி எஸ்.சிவபாலசுந்தரம்  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்திய போது, பதில் நீதவான் குறித்த சிறுமியை பாதுகாப்பாக சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த வருடத்தில் மாத்திரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உறவினர்களால் பராமரிக்கப்பட்டு தீயினால் சூடு வைத்து துன்புறுத்தப்பட்ட 3 சிறுவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .