2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சரியான திட்டமிடல் இன்மையால் பிரச்சினை:சி.வி.

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சரியான திட்டமிடல் இன்மையால் கழிவு அகற்றல் இன்று பாரிய பிரச்சினையாக உள்ளதென வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தலைமையில், திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த காலத்தில் கழிவு அகற்றல் பாரிய பிரச்சினையாக இருக்கவில்லை. தற்போது மக்கள் பெருக்கத்தால் பிளாஸ்ரிக் பாவனைகள் அதிகரித்துள்ளன. கொழும்பில் நாளாந்தம் 700 தொன் திண்மக்கழிவு அப்புறப்படுத்த வேண்டியுள்ளது.

இப்பிரச்சினை சில காலத்திற்கு முன்னர் பாரிய பிரச்சினையாக இருந்தது. எனினும், இன்று ஏதோவொரு வகையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  திட்டமிடலென்பது மிக முக்கியமானதொன்று. இப்பிரச்சினைக்கு நேரத்துடன் திட்டமிடாது விடின், இதிலிருந்து பலவித நோய்களுக்கு உள்ளாகி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்படலாம்.  

மேலும், உலகில் எந்தவொரு பொருளும் அழிந்து விடுவதில்லை. அழிக்கும்போது மீள ஒரு பொருள் மிஞ்சுகிறது. இந்நிலையில், கழிவுப் பொருட்களை சேகரித்து உரியவாறு முகாமைத்துவம் செய்வது சாலச் சிறந்தது.  கழிவு அகற்றல் தென்னிலங்கையில்  முன்னேறியுள்ளது. உதாரணமாக தங்களுடைய குழந்தைகளுக்கு குப்பைகளை உரியவாறு போடுவதற்கு பெற்றோர்கள் பழக்கப்படுத்தியுள்ளனர். இப்பழக்கம் மாணவர்களிடையேயும் பேணப்படுகிறது.  சிறு வயதிலிருந்து கழிவு அகற்றலை பிள்ளைகளுக்கு  பழக்கப்படுத்த வேண்டும்' என்றார்.

இக்கலந்துரையாடலில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுப்பதிப்பிள்ளை, உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள், மாநகரசபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட குழுவும்  உருவாக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .