2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தமிழ் - முஸ்லிம் மக்களை அமைதி காக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இரணை இலுப்பைக்குளத்து தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு அமைதி காக்குமாறு வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (23) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'கடந்த வாரம் இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள எனது கட்டவுட் மீது கறுப்பு பெயிண்ட் பூசியது மட்டுமல்லாது அதனை மேற்கொண்டது இஸ்லாமிய நபர்கள் தான் என்பதனை தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக 'மீண்டும் றிசாட் வருவான் அச்சமில்லை எதிர்பாருங்கள்' என்று எழுதப்பட்டுள்ள துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளது.

இச்செயற்பாடு குறித்த கிராம மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையினை குழப்பும் முகமாக மேற்கொள்ளப்பட்ட சதி என நான் அறிகின்றேன்.

ஏனைய பிரதேசங்களை விட மிகவும் கஷ்டப் பிரதேசங்களாக இருப்பவைகளில் இரணை இலுப்பைக்குளம், கல்மடு, காக்கயங்குளம், பூசாரி நகர், மண் கிண்டி, விளாத்திக்குளம், பரசங்குளம், வலயன்கட்டு போன்ற கிராமங்களாகின்றன.

இதனைக் கருத்திற்கொண்டே இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாடசாலையினை தரம் 9இல் இருந்து க.பொ.த சாதாரண தரம் வரை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீண்டகாலமாக வைத்தியர் இல்லாது காணப்பட்ட வைத்தியசாலைக்கு வைத்தியரை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அதன் விளைவாக தற்போது அங்கு  வைத்தியர் சேவையில் இருப்பதையும் மேலும் இரணை இலுப்பைக்குளத்தில் இருக்கின்ற விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் அப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.

மேற்படி நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் அதீத அளவு என்னை நேசிப்பதையும் நான் நன்கு அறிவேன். இன்னிலையில் மேற்படி சமூக விரோதச் செயலினூடாக இரு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவிக்கும் அளவிற்கு தீய செயலில் ஈடுபட்டு மற்றும் ஈடுபடுகின்ற காடையர்களை பொதுமக்கள் இனங்கண்டு புத்திசாதுரியமாக நடந்துகொள்ள வேண்டுமென்றும் பொதுமக்களிடம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்படி செயலில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்களாக இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. சம்பவ தினத்திற்கு முன்னைய தினம் ஒரு சில எமது அரசியல்வாதிகள் அங்கு சென்று வந்துள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றது.

எனவே மேற்படி செயலானது அரசியல் இலாபம் கருதியும் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தும் சுயலாபம் தேடும் நோக்கில் மேற்கொள்ளப்படுவது போன்று  தென்படுகின்றது.

இவ்வாறு சந்தேகிப்பதற்கான சில ஆதாரபூர்வமான சாட்சியங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் உண்மைத் தன்மையினை சரிவர ஆராய்ந்து குறித்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எனவே பொதுமக்களை தயவுசெய்து அமைதி காக்குமாறும்' அமைச்சர் அவ்வறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .