2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மது விற்பனை நிலையத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பெரியகடை கிராமத்தில் மக்களின் குடியிறுப்புகளுக்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி  அமைக்கப்பட்ட மது விற்பனை நிலையத்தை அகற்றக்கோரி பெரியகடை கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு பேரணியை புதன்கிழமை (26) மேற்கொண்டனர்.

உப்பள வீதியில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் 'அகற்று,அகற்று எமது கிராமத்தை விட்டு மதுபானசாலையை அகற்று', 'அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே', 'மதுபானசாலைக்கு வழங்கப்பட்ட கடைகள் எங்கே?' என்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பள வீதியில் ஆரம்பமான பேரணி பிரதான வீதியூடாகச் சென்று மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்தது.

பின்னர் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கிராம மக்கள் மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி துசார தலுவத்த,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஆகியோரிடம் கையளித்ததுடன் மன்னார் பிரதேசச் செயலகத்திலும் கையளித்தனர்.

இதன்போதுஇ 'மன்னார் பெரிய கடை கிராமத்தில் மக்களின் குடியிறுப்புகளுக்கு மத்தியில் கடந்த 6 ஆம் திகதி புதிதாக மது விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த மது விற்பனை நிலையத்தை எமது கிராமத்தில் இருந்து உடனடியாக எடுத்து வேறு இடத்தில் அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது குறித்த மது விற்பனை நிலையம் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ளவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பெண்கள் மாலை நேரத்தில் குறித்த வீதியூடாக செல்ல முடியாது உள்ளது. குறித்த மது விற்பனை நிலையத்தில் மதுபானத்தை வேண்டி குடித்த பின் அவ்விடத்தில் தீய வார்த்தைகளை பயண்படுத்தி சண்டை பிடிக்கின்றனர். பெண்களுக்கு முன்னால் சிறுநீர் கழிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் சிறுவர்கள்இ வயோதிபர்கள் என அனைவரும் நிம்மதி இன்றி தவிக்கின்றனர்.

எனவே உடனடியாக குறித்த மது விற்பனை நிலையத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மக்கள் மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.தயானந்தாவிடம்  கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதலளித்த பிரதேச செயலாளர்,

'பெரிய கடை பகுதியில் மது விற்பனை நிலையத்தை அமைக்க முழுமையான அனுமதியை நான் வழங்கினேன். அவர்கள் முழு ஆதாரத்தோடு வந்தார்கள். இதனால் அனுமதியை வழங்கினேன்.

இக்கிராமத்தில் இருந்து வேறு இடத்திற்கு மது விற்பனை நிலையத்தை மாற்ற வேண்டும் என்றால் பெரிய கடை கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து பிரிதொரு இடத்தை தெரிவு செய்து எழுத்து மூலம் தரவேண்டும். நான் இதனை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன்' என்றார்.

இதேவேளை, குறித்த பெரியகடை கிராமத்தில் உள்ள நூற்றிற்கும் மேற்பட்ட வீடுகளில் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதனை கட்டுப்படுத்தவே மது விற்பனை நிலையத்தில் அவ்விடத்தில் அமைக்க அனுமதி வழங்கியதாகவும் பிரதேசச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதேசச் செயலாளரின் கருத்திற்கு பெரிய கடை கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பின்னர் மன்னார் நகரசபை தலைவர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதுடன் இவ்விடயம் தொடர்பில் தன்னால் இயன்ற நடவடிக்கையை எடுப்பதாக மக்களிடம் உறுதியளித்தார்.

இந்த நிலையில்  கிராம மக்கள் மன்னார் நகரசபைக்குச் சென்று மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்திடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .