2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காணி சுவீகரிப்புக்கு எதிராக முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 மார்ச் 01 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


கிளிநொச்சி, இயக்கச்சி பிரதேசத்தில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதாக தெரிவித்து வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (28) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்ற காணி உரிமையாளர்கள் 8பேர் இந்த காணி சுவீகரிப்பு தொடர்பான மனுவொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலக அதிகாரியிடம் கையளித்தனர்.

இவ்வாறு கையளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஏ - 9 வீதிக்கு அருகாமையில் இயக்கச்சி, ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பொது மக்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் காணியை இராணுவத்தின் 552ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர், படைத்தலைமையகம் ஒன்றை அமைப்பதற்காக சுவீகரிக்கவுள்ளனர் என்று தெரிவித்து பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் ஊடாக காணிச் சொந்தக்காரர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காணியில் நாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்துள்ளோம். கடந்த கால போர் சூழல் காரணமாக நாம் இருப்பிடத்தை விட்டு வெளியேறி மாத்தளன், பொக்கனை வரை சென்று 2009ஆம் ஆண்டு இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்று மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தோம்.

அதன் பின்னர் 2009.9.14 அன்று எமது சொந்த கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது எமது காணிகளில் இராணுவ முகாம் அமைந்திருந்தது.

எனவே எமது காணிகளை விடுவித்து தருமாறு பல தடவை நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் கவனத்திற்கும் பிரதேச செயலகத்தில் மாதாந்தம் இடம்பெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தரும் இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். இருப்பினும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

தற்போது எமது காணிகளை இராணுவம் கையகப்படுத்தவுள்ளது. எனினும் எமக்கு இதற்கு பதிலாக மாற்று காணிகளோ நஸ்டஈடுகளோ தேவையில்லை. எமது சொந்த காணியை விடுவித்து தரவேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .