2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

'மன்னாரில் மட்டுமல்ல முல்லைத்தீவிலும் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் உள்ளன'

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்...

'மன்னாரில் மட்டுமல்ல முல்லைத்தீவிலும் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் உள்ளன என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் 'அ' பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சர்வதேசத்தின் திறந்த கண்காணிப்புடன் குறித்த புதைகுழிகள் தோண்டப்பட்டு அவை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும்.

போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக வீட்டுதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை, அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவு செய்யப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்னமும் மின்சார வதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை.

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகின்ற போதிலும் அவர்கள் குறித்த எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும்; எடுக்கப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் பெருமளவானோர் எந்தவித விசாரணைகளும் இன்றி வருடக்கணக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 80 இற்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளே அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் பகுதியில் ஒன்பது பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் காணப்படும் சூழலே காணப்படுகின்றது. எனவே சர்வதேசத்தின் திறந்த கண்காணிப்பின் கீழ் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டு அவை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் நில ஆக்கிரமிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து எமது மக்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர்.

எனவே எமது மக்கள் மீது தொடரும் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச விசாரணை ஒன்றினை மேற்கொள்வதன் மூலமும் மூன்றாந்தரப்பின் துணையுடன் கூட்டமைப்பு - அரசாங்கம் இடையிலான பேச்சுக்களை முன்னெடுப்பதன் மூலமுமே எமது மக்களுக்கான நிரந்தர சமாதானத்தையும் நிரந்தரத் தீர்வினையும் எட்ட முடியும்' என்றும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .