2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

எமது பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு அவசியமில்லை: சத்தியலிங்கம்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்,நவரத்தினம் கபில்நாத்

இன்றைய சூழ்நிலையில் எமது பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியமில்லையென்றும் இது இன்றைய நிலையில் எமது சமுதாயத்திற்கு தேவையற்றது. அத்துடன் மீளெழும் எமது இனத்திற்கு ஆரோக்கியமான பிள்ளைப்பேறுகளே அவசியம் என வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் நேற்று (04) தெரிவித்தார்.

 
குடும்ப திட்டமிடல் பணியக அமைப்பு - வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து கருப்பைக் கழுத்துப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் கருவியான 'கொல்போஸ் கோப்' கருவியினை கிளிநொச்சி பொதுமருத்துவமனைக்கு வழங்கினார்கள்.
 
இந்த உபகரணம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் நேற்று (04) இடம்பெற்ற போது, அந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 
சுகாதார அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
கிளிநொச்சி பொது மருத்துவமனை இந்த கருவியினால் பயன்பெறுவதோடு, வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இதன் மூலம் பயன்பெறவுள்ளனர். இதனை வழங்க உதவிய குடும்ப திட்டமிடல் பணியக அமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
வடமாகாண சுகாதார அமைச்சின் எண்ணங்களில் ஒன்றான 101 நாள் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சுகவனிதையர் சிகிச்சை நிலையங்களை உருவாக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
 
கடந்த கால யுத்தத்தின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கத்தினால் உள, உடல் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள எமது சமூகத்தை மருத்துவ ரீதியாக திட்டமிட வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு. இந்த பிரதேசங்களில் (வன்னிப்பகுதி) 40 வீதமானவர்கள் மந்த போசாக்கு நிலைமையுடையவர்களாக காணப்படுகின்றனர்.
 
அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளுமே இவ்வாறு குறைபோசாக்கு உடையவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் இது அவசியமாக நிவர்த்தி செய்யப்படவேண்டிய சமூகக் கடமையாகும். எமது சமுகத்தின் எதிர்காலம் பெண்கள் குழந்தைகளின் போசாக்கு நிலைமையில் மிகவும் தங்கியுள்ளது. எனவே 35இற்கு மேற்பட்ட பெண்களை இணைத்த ஆரோக்கிய சூழலை நோக்கிய வேலைத்திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம்.
 
இதனடிப்படையில் புற்றுநோய், உயர் குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களினால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் நோக்குடன் நமது அமைச்சு செயற்படுகின்றது. இன்று எமது சமுகத்திற்கு எது தேவை எது தேவையில்லை என்பதைப் பற்றிய தெளிவை நாம் ஏற்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
 
இயற்கையால் ஏற்படக்கூடிய வரட்சி எதிர்காலத்தில் நமது போசாக்கு நிலைமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே வீட்டில் கழிவு நீரில் எல்லோரும் வீட்டுத்தோட்டம் செய்கிற முயற்சியிலும் ஈடுபட வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில், குடும்ப திட்டமிடல் பணியக அமைப்பின் உயர் அதிகாரிகள், ஓய்வுபெற்ற பெண் நோயியல் மகப்பேற்று சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி பிரமிளா சேனாநாயக்கா, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் வைத்திய அத்தியட்சகர், மகப்பேற்று வைத்திய நிபுணர், வைத்திய அதிகாரிகள், மருத்துவ உத்தியாகத்தர்கள், மாவட்டத்தின் குடும்ப நல மருத்துவ பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .