2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் புதைகுழியை பாதுகாக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 மார்ச் 06 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியைத் தோண்டுவது தற்காலிகமாக நிறுத்தி அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை ஆய்வு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் புதைகுழியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார். 

மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்னம் தலைமையில் நடைபெற்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

புதைகுழியைத் தோண்டுவதைத் தற்காலிகமாக நிறுத்துவது என்று புதன்கிழமை (5) கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேநேரம், இந்தப் புதைகுழியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அத்துடன், இந்தப் பகுதியி;ல் மக்கள் குடியிருந்தார்களா?, கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தனவா?, தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பகுதியில் முகாம்களை அமைத்திருந்தார்களா? என்றும் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றார்கள் என்று அவர் கூறினார்.  

இந்த மனிதப் புதைகுழியிலிருந்து 84 பேருடைய மனித எலும்புக்கூடுகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புக்கூடுகளுக்குரியவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதைக் கண்டறிவதற்காக புராதன மனித எச்சங்களைப் பரிசோதனை செய்யும் வைத்திய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பான புலன் விசாரணைகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் இந்தப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் முறையற்ற வகையில் புதைக்கப்பட்டிருந்தார்கள் என்று வைத்திய பரிசோதனையில் தெரியவந்தாலும், புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினர் இந்தப் பகுதியில் மயானமொன்று இருந்திருக்கவில்லை என தெரிவித்தாலும், இது தொடர்பில் தீவிரமாக மேல் விசாரணைகள் நடத்தப்படுவது பற்றி நீதிமன்றம் தீர்மானிக்கும் என்றார்.

இந்த மனித புதைகுழி தொடர்பில் அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரத்ன கூறுகையில், 'மன்னார் மனித புதைகுழியைத் தோண்டும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது என்றார்.

அடிமட்டம் வரையிலான படைகளாக மண் எல்லாவற்றையும் தோண்டி முடித்திருக்கின்றோம். இதற்குக் கீழ் தோண்ட வேண்டிய தேவை இல்லை. ஆனால், இறந்தவர்களைப் புதைக்கும் வகையில், 3 சடலங்கள் தனித்தனியாகப் புதைக்கப்பட்டிருக்கின்றன. இந்த எலும்புக்கூடுகள் இந்த மனிதப் புதைகுழியுடன் சம்பந்தப்பட்டவையல்ல.

அவற்றை எதுவும் செய்யவும் இல்லை. இப்போதைய நிலையில், அதற்கான அவசியம் இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் அவற்றைப் பரிசோதனை செய்வதற்கு வசதியாக அடையாளப்படுத்தி வைத்திருக்கின்றோம் என்றார். 

அந்தக் குழியில் இருந்து எடுக்கப்பட்டிருப்பவற்றை ஆய்வுக் கூடத்தில் வைத்து, பால்நிலை, இறந்தவர்களின் வயது, மரணம் எப்படி நேர்ந்தது என்பவை பற்றியெல்லாம் ஆய்வு  செய்ய வேண்டி இருக்கின்றது.

எனவே, அடுத்த கட்ட நடவடிககையாக என்ன செய்ய வேண்டும், ஆய்வுக்காக இவற்றை எந்த நாட்டுக்கு அனுப்புவது, அதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும், அதில் சுகாதார திணைக்களத்திற்குரிய பொறுப்பு என்ன என்பது பற்றியெல்லாம் நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம் என்று சட்ட வைத்திய அதிகாரி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .