2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் மனித புதைகுழி; ஆய்வறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Menaka Mookandi   / 2014 மார்ச் 12 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.

மேற்படி புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள தடயப் பொருட்களையும், அங்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ என்பவற்றையும் ஆய்வு செய்தே இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த மனித புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள மண்ணின் மாதிரிகளை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அங்கு ஆய்வு செய்து விபரங்களை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார் என அவர் கூறினார்.

அத்துடன், மன்னார் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளிடம் புதைகுழியின் வரைபடம் ஒன்றைப் பெறுமாறும் உத்தரவிட்டுள்ள மன்னார் மாவட்ட நீதவான், இந்தப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டு உலோகப் பொருட்களை அணுசக்தி அதிகாரசபைக்கு அனுப்பி அவர்களின் அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. 

அதேநேரம், இந்த மனித எச்சங்களை வைத்திய பரிசோதனை செய்வதற்காக, கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியின் ஊடாக மேலதிக சட்ட வைத்திய அதிகாரிகளை வரவழைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த ஆய்வறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .