2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மறிச்சிக்கட்டி காணி பிரச்சினைக்கு தீர்வு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 27 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்ச்சைக்கூறிய மறிச்சிக்கட்டி, மறைக்கார்தீவு கிராம மக்களின் காணிப் பிரச்சினைககு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார் என்றும் இதற்கு முஸ்ஸிம்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாகவும் வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் றிப்கான் பதியுதீனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இடம்பெயர்ந்த நிலையில் மறிச்சிக்கட்டி, மறைக்கார்தீவு பகுதியில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களை திடீரென அங்கு சென்ற பொது பல சேனா அமைப்பினர் அச்சுறுத்தியதோடு இனவாதத்தை தூண்டும் வகையில் மக்களுடன் கதைத்துவிட்டுச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மக்களை வெளியேற்றும் நோக்கில் அந்த அமைப்பினர் தங்களினால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்த மக்களுக்காக குரல் கொடுத்த அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு எதிராகவும் பொது பல சேனா அமைப்பினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும் இந்த மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த அமைச்சர் றிஸாட் பதியுதீன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார். இப்பிரச்சினை தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்த நிலையில் இவர்களுடைய பேச்சுவார்த்தையின் பலனாக மறைக்கார்தீவு பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தூரத்தில் அந்த மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட காணியில் 50 ஏக்கர் காணியினை ஒதுக்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இச்செய்தி அந்த மக்களுக்கு ஆறுதல் அழித்துள்ளது. பொது பல சேனா என்ற இந்த இனவாதம், மதவாதம் பேசுகின்ற அமைப்பு, இலங்கை அரசிற்கு அவதூரை ஏற்படுத்தும் வகையிலேயே நடந்துகொள்கிறது.

இந்த அமைப்பை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கில் தமிழ், முஸ்ஸிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையினை சிதரடிக்கும் வகையிலே இவ்வமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

மறிச்சிக்கட்டி மக்களுக்காக மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் ஆயர் உட்பட பலர் குரல் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

இதேபோன்று முள்ளிக்குளம் மக்களின் காணி பிரச்சினைக்கும் குரல் கொடுத்து அந்த மக்களுக்கும் உரிய தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம். இதற்கு வடமாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்' என றிப்கான் பதியுதீன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0

  • M.A.A.Rasheed Monday, 28 April 2014 12:18 PM

    வட., கிழக்கு த‌மிழ், முஸ்லிம் மக்களே... கசப்புகளை மறந்து ஓரணியாகுங்கள். அப்போதுதான் எமது உரிமைகளை நாம் வெல்ல முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .