2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வட மாகாண ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர்: செல்வம் எம்.பி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடகவியலாளரும், வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபில்நாத்திற்கு தொலைபேசியூடாக தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையானது, ஊடகவியலாளர்களை நெருக்கடிக்குள் தள்ளி அவர்களின் பணியை முடக்க மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகவே கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வண்மையாகக் கண்டிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர் பாரிய அச்சுறுத்தல்களின் காரணமாக நாட்டை விட்டு பிரிதொரு நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

தொடர்ந்து, யாழ் ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்தில் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து, படையினர் கஞ்சா போதைப்பொருளை வைத்து ஊடகவியலாளர்களை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

தற்போது மக்களின் பிரச்சினைகளை வெளி உலகிற்கு கொண்டுவர மக்களுக்காக குரல் கொடுத்து வரும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான நவரத்தினம் கபில்நாத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவரது கடமையை செய்ய முடியாத வகையில் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அரச புலனாய்வுப் பிரிவினரால் அல்லது அரச படைகளினாலேயே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

யுத்த காலத்தில் கூட ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் செய்திகளை சேகரித்து தமது பணியினை முன்னெடுத்து வந்தனர். ஆனால் தற்போது ஊடகவியலாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லை.

ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தபடுகின்றனர். விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்படுகின்றனர். இதனால் ஊடகவியலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். ஊடகவியலாளர்களை பாதுகாப்பதில் அரசாங்கம் தொடர்ச்சியாக தவறிழைத்து வருகின்றது.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபில் நாத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு விடுக்கப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாக வவுனியா பொலிஸார் ஆராய்ந்து உரிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் ஊடகவியலாளர்களை பாதுகாக்கக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபடும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X