2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாணத்திற்குரிய நிதியை அரசாங்கமே வைத்து விளையாடுகிறது: சி.வி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாணத்துக்கு 5000 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நிதி தந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் பெரும் பகுதி நிதி தரப்படவில்லை. அதனை அரசாங்கமே வைத்து விளையாடுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா, ஓமந்தை, நவ்வி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (08) பிரதேச வைத்தியசாலைக்கான அடிக்கல்லினை நாட்டிய வடமாகாண முதலமைச்சர் அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணம் என்பது சிறிய பிரதேசம் இல்லை. பலவிதமான இடங்கள், தொழில்கள், சூழல்கள், மக்கள் கூட்டங்கள், இயற்கை வளங்கள் என்று பரந்து கிடக்கும் ஐந்து மாவட்டங்களின் சேர்க்கை. சில சந்தர்பங்களில் 40, 50 கிலோமீற்றருக்குள் பல வித வேற்றுமைகளை காண்கின்றோம்.

வவுனியா நகரில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றுக்கான வைத்தியசாலைக்கே அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்த இடங்களில் இருந்து 1996ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்த நீங்கள், தற்போது தான் மீள்குடியேறி வருகின்றீர்கள் என அறிகின்றேன்.

காணி சம்பந்தமான பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக கேள்விப்பட்டேன். தற்போது இந்த வரட்சியாலும் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்.

2009ஆம் ஆண்டுக்கு இறுதி யுத்தத்தின் போது முன்னரங்கப் பகுதி காவலரனில் இப்பிரதேசம் அமைந்திருந்தமையால் பாரிய அழிவுகளை சந்தித்திருந்தது.

ஆனாலும் இந்த நவ்விப் பிரதேசமும் அதன் சுற்றுப்புறப் பிரதேசமும் வவுனியா மாவட்டத்தில் மிகவும் தூய்மையான பிரதேசமாக அறிகின்றேன்.

வண்ணாங்குளத்தில் கண்ணகை அம்மன், குஞ்சுக்குளத்தில் முத்துமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளமை இதற்கு சான்றாகும். கஜபாகு மன்னனுடைய காலத்தில் தான் கண்ணகை அம்மன் வழிபாடு வலுப்பெற்றது என்பது கருத்தாகும். ஆகவே தொன்மை மிக்க இடம் என்பதில் சந்தேகமில்லை.

சுமார் 400, 500 வருடங்களுக்கு முன்னர் இங்கு கண்ணகை அம்மனுடைய வழிபாடு இடம் பெற்றுள்ளது என அறிகின்றேன். ஆனால் அம்மனின் ரவுத்திரம் ஏதோ வகையில் இங்கு பாதித்திருக்கலாம். இனி அப்படி இல்லை. அம்மனின் அருள் கிடைக்கும் என கருதுகிறேன்.

இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை ஆரம்பத்தில் வெளிநோயாளர் பிரிவினை கொண்டதாக அமையவுள்ளது. காலப்போக்கில் நோயாளர் விடுதியையும் கொண்டதாக மாறும். இதற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனக் நம்புகின்றேன்.

வட மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து வைத்தியசாலை அமைப்பதற்கு ரூபாய் 10 மில்லியனும் சுகாதார சேவையின் பிரித்தொதுக்கப்பட்ட கொடை நிதியில் இருந்து ரூபாய் 6 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் போன்று மேலும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு நிதிப்பற்றாக்குறையே பிரதான காரணமாகவுள்ளது. எமக்கு தந்துவிட்டதாக கூறும் பணத்தின் பெரும் பகுதி எமக்கு தரப்படப்படவில்லை. நாளாந்தம் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும்  பணம் தந்துவிட்டதாக கூறுகின்றார்கள். ஆனால் அவை தரப்படவில்லை.

அதில் சுமார் ஐந்தில் இரண்டு பங்கு மாத்திரமே கிடைத்துள்ளது. மிகுதி அனைத்தையும் அரசாங்கமே வைத்து விளையாடுகிறது. விளையாடுகிறது என்று நான் ஏன் கூறுகின்றேன் என்றால் என்ன செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள், எங்கே செய்கிறார்கள், யாருக்கு செய்கிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

தேர்தலை முன்னிட்டு திட்டம் இன்றி வேலைகள் கொடுக்கப்பட்டதால் தான் இன்று தொழிலாளர்கள் பாரிய பிரச்சனைகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள். எப்படியாவது வேலை ஒன்று கிடைக்கவேண்டும் என்பது தான், வேலை தேடும் சகோதரனின் யோசனை. அது சட்டப்படி கொடுக்கப்படுகின்றதா என்பதை ஆராய்வது வேலை கொடுப்பவரின் கடமை.

சட்டத்திற்கு புறம்பாக வேலைகளை கொடுத்துவிட்டு அவர்களை நட்டாற்றில் விடுவது பிழையான செயல். இனியாவது மக்கள் பிரதிநிகளாகிய எங்களுடன் கலந்தாலோசித்து எங்களையும் இணைந்து வேலைகளை செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்கும் அதேவேளை, மக்களுக்கு தேவையான திட்டங்களை வடமாகாணத்தில் மேற்கொள்வோம் என இந்த இடத்திலே தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X