2025 ஜூலை 16, புதன்கிழமை

சிறுநீரக பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக வவுனியா

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இலங்கையில் சிறுநீரகநோய் பாதிப்பு அதிகமாகவுள்ள மாவட்டங்களில் இரண்டாமிடத்தில் வவுனியா மாவட்டம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் திங்கட்கிழமை (1) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடமாகாண சுகாதார அமைச்சின் 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடுகளிலிருந்து மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளத்திலும்  வவுனியா மாவட்டத்தின்  நவ்வியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின்  குமுழமுனையிலும்  3 புதிய வைத்தியசாலைகளை ஆரம்பித்துள்ளோம். இவை ஒவ்வொன்றுக்கும் 14 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டது. 

புதுக்குடியிருப்பில் புதிய ஆயுர்வேத வைத்தியசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் சில தினங்களில் நாட்டப்பட்டு, வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் சிறுநீரக நோய் அதிகமாகவுள்ள இரண்டாவது மாவட்டமாக வவுனியா மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து,  பெருமளவான நோயாளிகள் முல்லைத்தீவிலும் உள்ளனர்.

இவ்வாறான நிலையில், இதுவரை காலமும் சிறுநீரகநோய் தொடர்பான நோயாளிகள் இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லவேண்டியிருந்தது. இதனால் அவர்கள் பணப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை உள்ளிட்ட  பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது நாம் சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்தச் சுத்திகரிப்புக்காக 6 இயந்திரங்களுடன் சிகிச்சை நிலையத்தை திறந்துவைக்கவுள்ளோம். இதற்கு மத்திய அரசும் வேறு நிறுவனங்களும் நிதியுதவி செய்துள்ளது.  மேலும், மத்திய அரசு எமக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளமையால் முல்லைத்தீவிலும் இவ்வாறான சிகிச்சை நிலையத்தை ஆரம்பிப்பதற்கு  எண்ணியுள்ளோம்.

சிறுநீரக நோயாளிகளை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதற்காக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் சிகிச்சை நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இவை ஒவ்வொன்றும் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியில் வவுனியா, மாமடுவில் ஒன்றும் செட்டிகுளத்தில் ஒன்றும் முல்லைத்தீவு, மல்லாவியில் ஒன்றும் சம்பத்புரவில் ஒன்றும் நிறுவப்படவுள்ளன. இதற்கும் மத்திய அரசு நிதியுதவி செய்யவுள்ளது.

வடமாகாணத்தை உள்ளடக்கிய 5 வருட மூலோபாயத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 வருடங்களுக்கான அபிவிருத்தித்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே நாம் எமது மாகாணத்தில் அபிவிருத்திகளை செய்து வருகின்றோம்.

எமக்கு முக்கிய பிரச்சினைகளாக போசாக்கின்மை, சிறுநீரக நோய்த்தாக்கம் விசேட தேவையுடையோர் அதிகமாகக்  காணப்படுவது ஆகியன உள்ளன. இதற்கான விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

குறிப்பாக வடமாகாண சுகாதார, கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்கள் இணைந்து போசாக்கை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டுள்ளோம்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X