-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச்சங்க உணவக குடிநீரில் மலத்தொற்று காணப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து அந்த உணவகத்தை மூடுமாறுமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் மாணிக்கராசா கணேசராஜா, செவ்வாய்கிழமை (04) உத்தரவிட்டார்.
மேற்படி உணவகம் சுகாதார நடைமுறைகளுக்கு ஒவ்வாத வகையில் இயங்கி வருவதாக தெரிவித்து கடந்த ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பொதுச்சுகாதார பரிசோதகரின் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு குறித்த உணவகம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மூடப்பட்டது.
தொடர்ந்து, குறித்த உணவத்தின் கிணற்று நீர் மாதிரி பெறப்பட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது.
சுகாதார நடைமுறைகள் சீர் செய்யப்பட்டமையைடுத்த, மேற்படி உணவகத்தை மீண்டும் திறப்பதற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வறிக்கையில் குறித்த உணவகத்திற்கு பயன்படுத்தும் நீரில் மலத்தொற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்த, உணவகத்தை உடன் மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.