2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 15 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று வியாழக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சில மாதங்களாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த காகா ராதாகிருஷ்ணன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வாரமே வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன், தனது 6 வயது முதல் நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் பணியாற்றியவர்.

மங்கையர்க்கரசி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் நடித்தபோது ஒரு மரத்தில் ஏறி காகம் பிடிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது. அன்று முதல் அவர் 'காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார்.

நடிகர் திலகம் சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை. மாயி திரைப்படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.

திண்டுக்கல்லை பிறப்பிடமாகக் கொண்ட காகா ராதாகிருஷ்ணன், திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வசித்து வந்தார் இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2ஆவது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன் பேத்திகள் உள்ளனர்.

காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தகனம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (தட்ஸ்தமிழ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .