2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

நாக்கால் கோமாவுக்குச் சென்று மீண்ட பெண்

Editorial   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாக்கைக் கடித்துக் கொண்டது பற்றி ஆரம்பத்தில் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு பேச்சு மந்தமாகி, சுவாசிப்பதிலும், பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

சாதாரணமாகவே சாப்பிடும்போது, தவறுதலாக நாக்கைக் கடித்து விடுவோம். சிறிது நேரத்திற்கு வலி இருக்கும். அப்புறம் சரியாகிவிடும் என்பதால், இதெல்லாம் ஒரு பெரிய பிரச்னையா என்று விட்டுவிடுவோம்.

ஆனால், தற்செயலாக நாக்கைக் கடித்துக் கொண்ட பெண் ஒருவர், அரிதான கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கோமா வரை சென்று மீண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த 27 வயதான கெய்ட்லின் அல்சோப்,  தன் நண்பர்களுடன் சாப்பிடச் சென்றிருக்கிறார். அவர் சாப்பிடும்போது எதிர்பாராத விதமாக தனது நாக்கைக் கடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் லேசான வலி மட்டும் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

சில மணிநேரங்களுக்குப் பிறகு பேச்சு மந்தமாகியுள்ளது. சுவாசிப்பதிலும், பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றுள்ளார். அவருக்கு ஒவ்வாமை எதிர்வினைக்கு மருந்துகளைப் பரிந்த்துரைத்திருக்கின்றனர்.

 

இருந்தபோதும் கெய்ட்லின் நிலை மோசமடையத் தொடங்கி இருக்கிறது. அவரது தோல் சிவப்பு மற்றும் நீல நிறமாக மாறி உரியத் தொடங்கியுள்ளது. நாக்கும் கறுப்பாகி உள்ளது. பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், இவர் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான லுட்விக்ஸ் ஆஞ்சினா (Ludwig’s Angina) எனப்படும் பக்டீரியா தொற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.

இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில் வாய், கழுத்து மற்றும் தாடைப்பகுதியும் பாதிப்படைவதோடு, நாக்கின் கீழுள்ள மென்மையான திசுக்களை வேகமாகப் பாதிக்கப்படும். இதற்கு சிகிச்சையளிக்கத் தவறும்பட்சத்தில், நாக்கு உயர்ந்து சுவாசப் பாதையை அடைத்து விடும்.

பெரும்பாலும் குழந்தைகளைவிட பெரியவர்களையே இந்தத் தொற்று பாதிக்கும். கெய்ட்லின் அல்சோபுக்கு  வயதாகும்போது முளைக்கும் புதிய பல்லில் இருந்து தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. புதிய பல் முளைப்பது குறித்து ஏதும் அறியாமல் இருந்திருக்கிறார் அவர். 

நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க கெய்ட்லினை கோமா நிலைக்கு மருத்துவர்கள் தள்ளும் நிலை ஏற்பட்டது. 9 நாள்கள் வரை இவரை கோமாவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இவரின் சுவாசப் பாதையையும், ஒக்ஸிஜனையும் பாதுகாக்க மருத்துவர்கள் இப்படிச் செய்திருக்கின்றனர். அதோடு மற்ற உறுப்புகள் ஏதும் வேலை செய்யாமல் நிறுத்துவதைத் தவிர்க்கவும் இவ்வாறு செய்திருக்கின்றனர்.

`இது ஒரு வகையில் மீண்டும் பிறப்பதற்குச் சமம்’ என தனக்குச் சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார், கெய்ட்லின். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .