2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பலகாரங்களால் வடிவமைத்த ரங்கோலி சாதனை

Editorial   / 2024 நவம்பர் 06 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரிய இந்தியப் பலகாரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆகப் பெரிய ரங்கோலி வடிவம் முதல்முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த ரங்கோலி வடிவம் கிட்டத்தட்ட 10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டது.

ஏஸ் குழுமத்தோடு அலையன்ஸ் ஆஃப் கெஸ்ட் வொர்க்கர்ஸ் அவுட்ரீச், இட்ஸ் ரெய்னிங் ரெயின்கோட்ஸ், வேலையிடப் பாதுகாப்பு மன்றம், ஹெல்த்செர்வ் ஆகிய இதர பங்காளி நிறுவனங்களும் கைகோத்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள் ஏறத்தாழ 2,000 பேர் பங்கேற்றனர்.

ஏஸ் குழுமத் தலைவர் துங் யுய் ஃபாய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ரங்கோலிக் கலைஞரும் சிங்காரங்கோலி நிறுவனத்தின் நிறுவனருமான திருவாட்டி விஜயா மோகன், 65, ரங்கோலிப் படைப்பை வழிநடத்தினார்.

முறுக்கு, லட்டு, கேக், ஜாங்கிரி, பாதுஷா போன்ற பலகாரங்களால் அமைக்கப்பட்ட ரங்கோலி அந்த வண்ணங்களால் புத்துயிர் பெற்றது.

திருவாட்டி விஜயா மோகனுடன் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தோளோடு தோள் நின்று ரங்கோலி போடுவதில் ஈடுபட்டனர்.

இந்து அறக்கட்டளை வாரியமும் மனிதவள அமைச்சும் வழங்கிய 1,000க்கும் மேற்பட்ட பலகாரங்கள் ரங்கோலிக்குப் பயன்படுத்தப்பட்டன.

ஆடல், பாடல் அங்கங்களுடன் களைகட்டிய நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச முடிதிருத்தும் சேவை, விளையாட்டு அம்சங்கள், இலவச உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“பல மணி நேரமாக நான் ரங்கோலி போடுவதில் ஈடுபட்டேன். இது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. என்னைப் போன்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது சிறப்பாக உள்ளது,” என்று கப்பல் கட்டுமானத் துறையில் பணியாற்றும் ஜான் பிரின்ஸ்லி, 41, கூறினார்.

“தீபாவளி நிகழ்ச்சியில் முதல் முறையாகக் கலந்துகொள்கிறேன். இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது எங்கள் நேரமும் பயனுள்ள முறையில் கழிகிறது. வாரயிறுதி என்பதால் எந்நேரமும் வேலை, வேலைக்குப் பிறகு தங்கு விடுதி என இருக்கும் எங்களுக்குப் புத்துணர்ச்சியாக உள்ளது,” என்று கட்டுமான ஊழியர் ரவி  சொன்னார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .