2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

முள்ளே இல்லாத மீனை உருவாக்கிய ஆய்வாளர்கள்

Editorial   / 2026 ஜனவரி 02 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்மில் பலருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் ஒன்று மீன். ஆனாலும், மீனில் இருக்கும் முடிகள் காரணமாகவே பலரும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.

இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்கு ஒரு தீர்வை உருவாக்கிவிட்டனர். அதாவது முள் இல்லாத மீனைச் சீன ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த வகை மீன்களில் உள்ள சிறப்பம்சம் என்ன. இவை ஏன் முக்கியமானது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அசைவ உணவுகளில் மீன்களின் சுவை எப்போதுமே தனித்துவமானது. ஆனாலும், மீன்களில் இருக்கும் முட்களுக்குப் பயந்தே பலரும் அதை யோசித்து யோசித்தே சாப்பிடுவார்கள். மீன்களில் முட்கள் பெரிய பிரச்சினையாகவே இருக்கும். இதற்கிடையே அந்தப் பிரச்சினைக்கும் சீன ஆய்வாளர்கள் இப்போது ஒரு தீர்வை கண்டுபிடித்துவிட்டனர்.

பல ஆண்டு தீவிர ஆய்வுக்குப் பிறகு முள் இல்லாத ஒரு வகை மீனைச் சீன ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதற்கு 'சோங்கே எண் 6' (Zhongke No. 6) என்று பெயரிட்டுள்ளனர்.

சீனாவின் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக இந்த வகை மீன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசியா முழுவதும் பரவலாகச் சாப்பிடப்படும் பிரஷ்யன் கெண்டை மீன் வகையைச் சேர்ந்த இது, சதைப்பகுதியில் உள்ள சிறிய எலும்புகளை நீக்க மரபணு திருத்தும் (Gene editing) செய்யப்பட்டு, அதற்கேற்ப உருவாக்கப்பட்டது..

சீன அறிவியல் அகாடமி (CAS) விஞ்ஞானி குய் ஜியான்ஃபாங் தலைமையிலான டீம் இந்த மீனை உருவாக்கியது.. கெண்டை மீன்களில் Y-வடிவ தசைநார் எலும்புகள் உருவாக்க runx2b என்ற மரபணுவே காரணமாக இருக்கிறது. அந்த மரபணுவை மீன்களின் கரு நிலையிலேயே CRISPR-Cas9 கருவிகள் மூலம் ஜீன் எடிட்டிங் செய்து வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்தனர்.

இந்த மரபணு செயலிழப்பால், மீன் இயல்பான எலும்பு அமைப்பைப் பெறும் அதே வேளையில், அதன் சதைப்பகுதியில் நுண்ணிய எலும்புகள் இன்றி வளரும். கெண்டை மீன்களில் பொதுவாக 80க்கும் மேற்பட்ட தசைநார் எலும்புகள் இருப்பதால், இவை தொண்டையில் அடைப்பு ஆபத்தை உருவாக்குகிறது. இதனால் மீனைச் சாப்பிடுவோருக்கும் அது பெரும் சிரமத்தையும் ஏற்படுத்துகின்றன. அதற்கு மாற்றாகவே இந்த புதிய வகைக் கெண்டை மீனை உருவாக்கியுள்ளனர்.

இந்த முள்ளில்லா கெண்டை மீன் உண்பதற்கு எளிதானது. மேலும், வணிக ரீதியான மீன் வளர்ப்புக்காகவும் இது மேம்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான கெண்டை மீனை விட 'சோங்கே எண் 6' மீன்கள் வேகமாக வளர்கின்றன.. குறைந்த தீவனம் போதும்.. அதிக நோயெதிர்ப்பு சக்தியுடன் வேகமாக வளரும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்துடன் அதிக மீன்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சீனாவின் CAS திட்டத்தின் கீழ் இந்த மீனை உருவாக்கியுள்ளனர். சுமார் ஆறு ஆண்டு ஆய்வுக்கு பிறகே இந்த மீனை உருவாக்கியுள்ளனர். இத்திட்டம் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது, வளர்ப்புச் செலவுகளைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும்.

இது மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது. அதேநேரம் இந்த ஆய்வு இத்தோடு நின்றுவிடாது.. வரும் காலத்தில் வேறு பல நன்னீர் மீன் இனங்களிலும் இதேபோன்ற மரபணு மாற்றங்களைச் செய்து, முள் இல்லாத வேகமாக வளர்க்கக்கூடிய மீன்களை ஆய்வாளர்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தேவையான சோதனைகளுக்குப் பிறகு முள் இல்லாத இந்தக் கெண்டை மீன்கள், வரும் ஆண்டுகளில் சந்தையில் நுழையும். மீன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியை அதிகரிக்கவும் இவை உதவும் எனச் சீன ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X