2025 மே 15, வியாழக்கிழமை

உயிருள்ள நாய்க்குட்டியை 1100 மைல் தூரம் தபாலில் அனுப்ப முயன்ற பெண்

Kogilavani   / 2011 பெப்ரவரி 07 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரோடு உள்ள நாய்க்குட்டியொன்றை பெட்டியொன்றில் அடைத்து தபால் சேவை மூலம் 1,100 மைல்களுக்கு அப்பால் உள்ள தனது உறவினருக்கு அனுப்ப முயன்றுள்ளார். தற்போது இப்பெண்  மீது மிருகவதைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்டேசி சம்பியன் எனும் 39 வயதான இப்பெண் மினியோ பொலிஸ் நகரிலிருந்து ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில்  வசிக்கும் தனது உறவினரின் குழந்தைக்காக அந்நாய்க்குட்டியை அவர் பொதிசெய்து விமானத் தபால் மூலமாக அனுப்ப முயன்றார். அவரது அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்கள் அந்தப் பொதி நகர்வதையும் அந்தப் பொதியிலிருந்து குழைக்கும் சத்தம் வருவதையும் கேட்டு திகைப்படைந்தனர்.

இறுக்கமாக பொதியிடப்பட்ட தபால் பொதியை தபால் ஊழியர்கள் பிரித்துப் பார்த்தபோது அந்தப் பொதியிலிருந்து 4 மாதங்கள் நிறைந்த நாய்க்குட்டியை மீட்டுள்ளனர்.

பொலிஸ் சார்ஜன்ட் ஏஞ்சலா டோஜ் இது குறித்து தெரிவிக்கையில் அந்த பெட்டி குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு 2 நாட்கள் சென்றிருக்கும். அப்பெட்டியில் காற்றுத்துவாரங்கள் உள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக அவை டேப்பினால் ஒட்டப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.

'அது உண்மையில் முட்டாள்தனமான வேலை. அந்த நாய்க்குட்டி குடும்ப நண்பருக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பப்படவிருந்தது. ஆனால் இறந்த நிலையில் அந்த நாய்க்குட்டி சென்றடைந்திருந்தால் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டிருப்பார்கள்.

பொதியிலுள்ள பொருளை இனங்காணாமல் இருந்தால் அதனை முறையாக கையாள முடியாது. அந்நாய்குட்டி விமான சரக்குப் பொதியாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். அதற்கு உணவும் நீரும் கிடைத்திருக்காது. நாய்க்குட்டியொன்றினால் அவ்வளவு நீண்ட நேரத்திற்கு உணவும் நீரும் இல்லாமல் வாழ முடியாது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் நிலைய ஊழியர்களிடம் பொதியை ஒப்படைத்த ஸ்டேசி சம்பியன், கவனம் கவனம் எனக் கூறிக்கொண்டிருந்தாராம். பெறுமதியான பொருளொன்று அதில் இருப்பதாக தெரிவித்த அவர், பெட்டியிலிருந்து சத்தம் வந்தால் வியப்படைய வேண்டாம். அதில் விளையாட்டு ரோபோவொன்று இருக்கிறது எனவும் கூறினாராம்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .