Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 27 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச. விமல்
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இம்முறை இலகுவான குழு என எதிர்பார்க்கப்பட்டு, கடினமான குழுவாகவும், சுவாரசியமான குழுவாகவும் மாறிய குழு, குழு, D. இந்த நிலைக்கு முழுக்க முழுக்க காரணம் ஆர்ஜன்டீனா அணியும், லியோனல் மெஸ்ஸியுமே. ஆராஜன்டீனா அணி இந்தக் குழுவில் இலகுவாக வெற்றி பெற்று முதலிடத்தை பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் இறுதியில் மிகப் பெரிய அழுத்தத்துக்கு மத்தியில் தட்டு தடுமாறி இரண்டாம் சுற்றுக்கு தெரிவானார்கள். இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக போராட வேண்டும் என்ற நிலையில் காணப்பட்ட குரேஷியா அணி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. அதிலும் ஆராஜன்டீனா அணியுடன் 3-0 என்ற மிகப்பெரிய வெற்றியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக்கொண்டார்கள்.
ஜூகோஸ்லாவியா நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடக மாறிய பின்னர் 1998 ஆம் ஆண்டு குரேஷியா அணி உலகக்கிண்ண தொடரில் காலபதித்தது. முதல் உலகக்கிண்ண தொடரில் மூன்றாமிடம் வரை சென்றவர்கள், அதன் பின்னர் விளையாடிய மூன்று தொடர்களில் முதல் சுற்றுடன் வெளியேறினார்கள். இம்முறை இரண்டாவது தடவையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்முறையே இவர்கள் முதல் சுற்றின் மூன்று போட்டிகளிலும் முதற் தடவையாக வெற்றி பெற்றுள்ளார்கள். 1998 ஆம் ஆண்டு முதல் சுற்றில் ஆர்ஜன்டீனா அணியிடம் இவர்கள் தோல்வியினை சந்தித்திருந்தார். இம்முறை அதற்கான பதிலடியினை வழங்கிவிட்டனர். குழு நிலையில் முதலிடத்தை பெற்றுள்ளமையினால், டென்மார்க் அணியினை இரண்டாம் சுற்றில் சந்திக்கவுள்ளார்கள். டென்மார்க் அணி தரப்படுத்தல்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது. குரேஷியா அணி இருபதாமிடத்திலுள்ளது. இந்த நிலையினை பார்த்தால் டென்மார்க் அணி பலமானது. ஆனால் முதல் சுற்றில் குரேஷியா அணி 7-1 என்ற மொத்த கோல் பெறுதியினை கொண்டுள்ளமையினால் இவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற நம்பிக்கைக்கு வர முடியும். அவர்கள் விளையாடும் விதம் இம்முறை உலகக்கிண்ணத்தை வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு நாடாக இவர்களையும் கருதலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குரேஷியா அணி உலகக்கிண்ணத்தை வெற்றி பெற வாய்ப்புள்ள ஏழாவது அணியாக தற்போது பந்தயக்காரர்களினால் தரப்படுத்தப்பட்டுளள்து. டென்மார்க் அணி பலமான குரேஷியா அணிக்கு எந்தளவுக்கு சவால்களை வழங்குவார்கள் என்பதனை போட்டியின் போதே பார்க்க முடியும்.
ஆர்ஜன்டீனா அணி பலமான அணியாக உலகக்கிண்ணத்தில் களமிறங்கியது. ஆனால் அவர்கள் தடுமாறிய விதம் அவர்கள் மீது அவநம்பிக்கயை ஏற்படுத்தியுள்ளது. பந்தயக்காரர்கள் கூட இவர்களுக்கான வெற்றி வாய்ப்பினை குறைத்துள்ளார்கள். முதற் போட்டியில் உலகக்கிண்ண அறிமுகத்தை மேற்கொண்ட ஐஸ்லாந்து அணியிடம் தடுமாறி 1-1 என்ற சமநிலையில் போட்டியினை நிறைவு செய்தார்கள். மெஸ்ஸி பனால்டி உதையினை தவறவிட்டார். அதுவே ஆர்ஜன்டீனா அணிக்கான முதலாவது அடியாக விழுந்தது. அந்த பனால்டி உதை கோலாக மாறியிருந்தால் சிலவேளைகளில் அணியின் ஒட்டுமொத்த நிலையும் மாறிப்போயிருக்கும். ஏற்பட்ட அழுத்தத்திலிருந்து அவர்கள் முழுமையாக இன்னமும் விடுபடவில்லை. நைஜீரியா அணியுடன் இறுதி நேரத்தில் கோலை வழங்கி பின்னர் மிகவும் போராடி கோலடித்து வெற்றி பெற்றுக்கொண்டார்கள். எவ்வாறோ அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிட்டால் அழுத்தங்கள் குறையும். ஆனால் பிரான்ஸ் அணி அடுத்த சுற்றில் என்னும் போது இலகுவான அணிகளுடன் தடுமாறியவர்கள் எவ்வாறு பிரான்ஸ் அணியினை எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஆர்ஜன்டீனா அணியின் விளையாடும் வீரர்கள் முதலிரு போட்டிகளிலும் சரியாக அமையவில்லை என்பது மிகவும் வெளிப்படையாக தென்பட்டது. ஆனால் மூன்றாவது போட்டியில் அணி சிறப்பான கட்டமைப்புள்ள அணியாக தென்பட்டது. அந்த நிலை உருவாகிவிட்டால் அணி பலமான நிலைக்கு வந்துவிட்டது என நம்பலாம். அதன் காரணமாகவே நைஜீரியா அணியுடன் போராடி இரண்டாவது கோலை அடிக்க முடிந்தது. பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டீனா அணிகளுக்கிடையிலான போட்டி 50-50 நிலையுள்ள போட்டியாக கருத முடியும். ஆக இரண்டாம் சுற்றில் மிகவும் விறுவிறுப்பான போட்டியாக இந்த போட்டியினை கருத முடியும்.
நைஜிரியா அணி இம்முறை சிறப்பாக விளையாடியுள்ளார்கள். ஆர்ஜன்டீனா அணியுடன் சமநிலை முடிவினை பெற்றால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிடலாமென்ற நிலையில் ஆர்ஜன்டீனா அணியுடன் விளையாடினார்கள். ஆர்ஜன்டீனா அணி 1-0 என்ற முன்னிலயினை பெற்றாலும், 51வது நிமிடத்தில் அடித்த பனால்டி கோல் மூலம் போட்டி சமநிலைக்கு வந்தது. அதே நிலையை தக்க வைக்க அவர்கள் போராடிய போதும் ஆர்ஜன்டீனா அணி 86 வது நிமிடத்தில் அடித்த இரண்டாவது கோல் மூலமாக நான்காவது தடவையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் அவர்களது கனவு இல்லாமல் போனது. ஐஸ்லாந்து அணியினை 2-0 என வெற்றி பெற்றுக்கொண்டார்கள். குரேஷியா அணியினை இவர்களால் இலகுவாக எதிர்கொள்ளமுடியவில்லை.
ஐஸ்லாந்து அணி முதல் போட்டியில் ஆர்ஜன்டீனா அணியுடன் சமநிலை முடிவினை பெற்றுக்கொண்டார்கள். இதுவே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி என கூற முடியும். வெறும் மூன்றரை லட்சம் மக்கள் தொகை உள்ள நாடு முதற் தடவையாக உலககிண்ண தொடருக்கு தகுதி பெற்று கால்பந்தின் வல்லரசு நாடு ஒன்றை சமன் செய்வது ஒன்றும் இலகுவான காரியமல்ல. அதனை செய்துள்ளார்கள். இந்த நம்பிக்கை எதிர்வரும் காலங்களில் அவர்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாட உதவும் என நம்பலாம். ஆனால் முதற் போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர்களினால் அடுத்த நைஜிரியா அணியின் போட்டியில் அவ்வாறு விளையாட முடியவில்லை. பலமான குரேஷியா அணிக்கெதிராக இவர்களினால் சிறப்பாக விளையாட முடிந்தது. போட்டியினை சமன் செய்யும் வாய்ப்பினை 90வது நிமிடத்தில் தவறவிட்டார்கள். பலமான இரண்டு அணிகளுக்கு பெரும் சவாலாக விளங்கிய இவர்கள் நைஜீரியா அணியுடன் வெற்றி பெற்றிருந்தால் அவர்களின் நிலை இன்னமும் உயர்ந்திருக்கும். எதிர்காலத்தில் இவர்களை பலமான நாடாக நம்பலாம் என்ற நிலையினை உருவாக்கியுளார்கள்.
போட்டி முடிவுகள்
ஆர்ஜன்டீனா vs ஐஸ்லாந்து 1 - 1
குரேஷியா vs நைஜீரியா 2 - 0
ஆர்ஜன்டீனா vs குரேஷியா 0 - 3
நைஜீரியா vs ஐஸ்லாந்து 2 - 0
ஐஸ்லாந்து vs குரேஷியா 1 - 2
நைஜீரியா vs ஆர்ஜன்டீனா 1 – 2
புள்ளி விபரம்
1 குரோஷியா 3 3 0 0 7 1 6 9
2 அர்ஜென்டினா 3 1 1 1 3 5 -2 4
3 நைஜீரியா 3 1 0 2 3 4 -1 3
4 ஐஸ்லாந்து 3 0 1 2 2 5 -3 1
(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)
இரண்டாம் சுற்றுப் போட்டிகள்
ஜூன் 30 - 19: 30, ஆர்ஜன்டீனா எதிர் பிரன்ஸ்
ஜூலை 01 - 21.30 , டென்மார்க் Vs குரேஷியா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago