2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

புதிய இலங்கைக்கான புதிய சவால்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜாம்பவான்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தனவின் பின்னரான புதிய அணியாக, இக்குழாமிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள அணி அமையவுள்ளது.

அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், உப தலைவராக லஹிரு திரிமான்ன தொடர்ந்தும் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியொன்றில் அவர் சதத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆகியுள்ள போதிலும், அவரது இறுதி 26 இனிங்ஸ்களில் (13 டெஸ்ட்கள்) இரண்டே இரண்டு அரைச்சதங்களுடன் 19.13 என்ற சராசரியைக் கொண்டிருக்கின்ற போதிலும், அவர் மீதான நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

லஹிரு திரிமான்ன ஒரு திறமையான வீரர் என்ற கருத்து நிலவுகின்ற போதிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்க அளவு திறமையை வெளிப்படுத்தியுள்ள போதிலும், டெஸ்ட் போட்டிகளுக்கான நிரந்தரத் தெரிவாகக் காணப்படுகிறார் என்பது, விமர்சனங்களை ஏற்படுத்தாமலில்லை. ஆனால், சங்கக்காரவுக்குப் பின்னரான இலங்கை அணியில், தனக்கென ஓர் இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளுமாறு வழங்கப்பட்ட வாய்ப்பாக இதைக் கருத முடியும்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக திமுத் கருணாரத்னவும் கௌஷால் சில்வாவும் களமிறங்கவுள்ளனர். இதில், கௌஷால் சில்வாவுக்கு சதங்களும் திமுத் கருணாரத்னவுக்கு அதிகமான ஓட்டங்களும் தேவைப்படுகின்றன. இருவருமே, ஓரளவு போட்டியிடக்கூடிய மனநிலையையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ள போதிலும், போதுமானனளவு திறமைகளை வெளிப்படுத்தியிருக்கவில்லை என்ற விமர்சனம் காணப்படுகின்றது.

மூன்றாமிலக்கத்தில் லஹிரு திரிமன்ன களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட, நான்காமிடத்தில் அஞ்சலோ மத்தியூஸா அல்லது டினேஷ் சந்திமாலா என்ற கேள்வி எழுகின்றது. அனேகமாக, அஞ்சலோ மத்தியூஸே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, ஐந்தாமிடத்தில் டினேஷ் சந்திமால் களமிறங்கவுள்ளார். பாகிஸ்தானுக்கெதிரான கடந்த தொடரில் அதிரடிச் சதத்துக்குப் பின்னர், அவர் போதுமான ஓட்டங்களை வெளிப்படுத்தாததோடு, ஒட்டுமொத்தமாகவும் ஓட்டங்களை அதிகமாகப் பெற வேண்டிய தேவை அவருக்குக் காணப்படுகிறது. லஹிரு திரிமான்னவோடு, இலங்கையால் அதிகம் கவனிக்கப்படும் நம்பப்படும் வீரராக டினேஷ் சந்திமால் காணப்படுவதால், அந்த நம்பிக்கைக்குப் பதிலளிக்க வேண்டிய தேவை அவருக்கு உண்டு.

ஆறாமிலக்கத்தில் அல்லது ஏழாமிலக்கத்தில், மிலிந்த சிரிவர்தன தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. தனது அறிமுகப் போட்டியில் மிகச்சிறப்பான துடுப்பாட்டப் பெறுபேற்றை வெளிப்படுத்திய குசால் பெரேரா, ஆறாம் அல்லது ஏழாம் இலக்கத்தில் உறுதியாகக் களமிறங்கவுள்ளார்.

பந்துவீச்சாளர்களில், தம்மிக்க பிரசாத்தின் இடம் உறுதி என்பதோடு, நேற்றுடன் முடிந்த பயிற்சிப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுரங்க லக்மால், நுவான் பிரதீப் இருவரும், அடுத்த ஓர் இடத்துக்காக மோதவுள்ளனர்.
மறுபுறத்தில், ரங்கன ஹேரத்தும் தரிந்து கௌஷாலும் சுழற்பந்து வீச்சாளர்களாகக் களமிறங்கவுள்ளனர். அதுவும், அடுத்தாண்டு உலக இருபதுக்கு-20 தொடருடன் ஓய்வுபெறவுள்ளதாக சமிக்ஞைகளை ஹேரத் வெளிப்படுத்தியுள்ள நிலையிலும் அவரது அண்மைக்கால உடற்தகுதிப் பிரச்சினைகள், போர்ம் இழப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும், அண்மையில் தூஸ்ரா பந்துவீச்சுத் தடை செய்யப்பட்ட நிலையிலுள்ள தரிந்து கௌஷாலின் வளர்ச்சி முக்கியமானது. தூஸ்ரா இல்லாத நிலையை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படுவதாக இருக்கும்.

அணியின் துடுப்பாட்ட வரிசை என்னவாறாக இருந்தாலும், அணியின் முதல் ஏழு வீரர்களுமே 30 வயதுக்குட்பட்டவர்களாகவும், அஞ்சலோ மத்தியூஸைத் தவிர ஏனைய அனைவருமே டெஸ்ட் அரங்கில் அனுபவம் குறைந்தவர்களாகவுமே இருக்கவுள்ளனர்.

இலங்கை அணியின் பயிற்றுநராக இருந்த மார்வன் அத்தப்பத்துவும் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில், சற்றுத் தளம்பலான நிலைமை காணப்படலாம். ஆகவே, டெஸ்ட் அரங்கில் ஓரளவு பலமற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கூட, இலங்கைக்கு மிகவும் சவாலாக அமையக்கூடும்.

டெஸ்ட் தரப்படுத்தலில் 89 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் இலங்கையும் 81 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் காணப்படுகின்றன.

இத்தொடரில் இலங்கைக்கு 2-0 என்ற தொடர் வெற்றி கிடைத்தால், 93 புள்ளிகளைப் பெற்று, 6ஆவது இடத்திலிருக்கும் நியூசிலாந்துக்கிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தைக் குறைக்க முடியும். மாறாக, இத்தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டால், 87 புள்ளிகளுடன் 7ஆம் இடத்துக்குச் செல்ல, 84 புள்ளிகளுடன் இலங்கை அணி 8ஆவது இடத்துக்குச் செல்லும்.

இளைய, அனுபவமற்ற அணியாகக் களமிறங்கும் இலங்கை அணி, மற்றொரு அனுபவமற்ற அணியான மேற்கிந்தியத் தீவுகளை, அதுவும் புதிய தலைவரான ஜேஸன் ஹோல்டரின் தலைமையில் களமிங்கும் அவ்வணியை, ஆரம்பத்திலிருந்தே அழுத்தத்துக்குள்ளாக்குவது தான், இந்தச் சவாலில் வெற்றிபெறுவதற்கான ஒரே வழியாகும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X