Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
லசித் மலிங்க எனும் பெயர், இலங்கை இரசிகர்களுக்கு இரண்டுவிதமான உணர்வுகளைத் தரக்கூடியது. ஒன்று, யோக்கர் பந்துகளை அநாயசமாக வீசி, விக்கெட்டுகளைக் கைப்பற்றி, வெற்றிகளைப் பெற்றுத்தரும் நாயகன். இரண்டாவது, நாட்டின்மேல் பற்றுக் கொண்டவரல்லர் அல்லது ஐ.பி.எல் போட்டிகளை அதிகமாக விரும்பும் ஒருவர் என, குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் சித்தரிக்கப்படும் ஒருவர். இவை இரண்டுமே சிலவேளைகளில் ஒன்றாக இருக்கலாம், சில வேளைகளில், ஏதாவதொன்று தான் சரியாக இருக்க முடியும். ஆனால், இவை இரண்டுக்குமிடையில் ஏதாவதொரு சம்பந்தமுள்ளது என்பது தான் உண்மை.
அண்மையில் எழுந்த சர்ச்சை, முழங்கால் உபாதைக்குள்ளான லசித் மலிங்க, ஆசியக் கிண்ணப் போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் பங்குபற்றியதோடு, உலக இருபதுக்கு-20 தொடரின் குழாமுக்குத் தெரிவுசெய்யப்பட்ட போதிலும், அத்தொடருக்காகத் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய அவர், உடற்றகுதிப் பிரச்சினைகள் காரணமாக அத்தொடரில் பங்குபற்றியிருக்கவில்லை.
அத்தொடரில் இலங்கை அணி மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தி, நாடு திரும்பியபின்னர், லசித் மலிங்க மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்திருந்தன. இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, லசித் மலிங்கவின் கருத்துகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டதோடு, இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றவாறான கருத்துகளை வெளியிட்டார். தற்போதைய பிரதம தேர்வாளர் அரவிந்த டி சில்வா, ஒருபடி மேலேசென்று, லசித் மலிங்க, தனக்குக் காயமெனப் பொய்யாக நடிக்கிறார் என்றவாறான கருத்தை வெளியிட்டதோடு, ஐ.பி.எல் தொடரில் விளையாடும்போது, உண்மை வெளிவரும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஐ.பி.எல் தொடரில் லசித் மலிங்கவால் பங்குபற்ற முடியாது என, மும்பை இந்தியன்ஸ் அணியின் வைத்தியர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த 4 மாதங்களுக்காவது அவரால் விளையாட முடியாது எனத் தெரிவித்துள்ளனர். லசித் மலிங்கவின் முகவரோ, அவரால் 5 மாதங்களுக்கு விளையாட முடியாது என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இப்போது, லசித் மலிங்க, காயத்தைப் பொய்யாகக் காட்டுகிறார் அல்லது நடிக்கிறார் எனக் குற்றஞ்சாட்டியோரின் முகத்திரை, கிழிக்கப்பட்டுள்ளது. சாதாரண இரசிகர்களோ அல்லது மூன்றாந்தரப் பத்திரிகையாளர்களோ, இவ்வாறான தகவல்களை வெளியிடுவதென்பது வேறு விடயம். மாறாக, அரவிந்த டி சில்வா போன்ற மிகப்பெரிய ஜாம்பவான், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பிலுள்ள திலங்க சுமதிபால, மிகவும் அறியப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலர் ஆகியோர், அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதென்பது, சாதாரணமானது கிடையாது. சாதாரண மக்களிடம், லசித் மலிங்கவின் பெயரைத் திட்டமிட்டு அழிப்பதற்கான முயற்சி என்றே அதைக் கருத முடியும்.
உலக இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதற்கு, லசித் மலிங்க ஆர்வத்துடன் இருந்தார் என்பதை, அவர் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், ஆசியக் கிண்ணப் போட்டிகளில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, அந்த ஆர்வத்தை, அவரது உடற்றகுதி தொடர்பான நம்பிக்கையீனம் முந்திக்கொண்டது. அதனாலேயே, இத்தொடரில் தன்னால் விளையாட முடியாது என அவர் தெரிவித்துவந்தார். இதன் மத்தியிலேயே, அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழு, அத்தொடருக்காக மலிங்கவைத் தேர்வுசெய்தது.
குறித்த வீரருக்கே, தனது உடல்நிலை தொடர்பாக நம்பிக்கையற்ற நிலை இருக்கும்போது, 4 தொடக்கம் 5 மாதங்களுக்குப் போட்டிகளில் விளையாட முடியாத நிலை அவருக்கு இருக்கும்போது, எதன் அடிப்படையில் அத்தொடருக்காக மலிங்க சேர்க்கப்பட்டார் என்ற கேள்வி இதில் எழுகிறது. இலங்கை அணியின் வைத்தியர்களின் ஆலோசனை, இவ்விடயத்தில் கோரப்பட்டதா என்பது முக்கியமான கேள்வி. அவ்வாறு, அவரைச் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டால், அவ்வாறான அனுமதியை வழங்கியதை அவ்வைத்தியர்கள் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? அவ்வாறு ஆலோசனை கோரப்பட்டிருக்காவிடில், அதற்கான காரணம் என்ன? அதைவிடுத்து, லசித் மலிங்க மீது, குற்றஞ்சாட்டுவதற்கான முயற்சிகளில், கிரிக்கெட் சபைத் தலைவர் தொடக்கம் அனைவரும் ஈடுபட்டமைக்கான காரணம் என்ன?
ஆரம்பத்திலிருந்தே (அதாவது, ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்திலிருந்தே), ஐ.பி.எல் போட்டிகளை லசித் மலிங்க அதிகம் விரும்புகிறார், இலங்கை மீது அவருக்கு நாட்டுப்பற்றுக் கிடையாது போன்ற தகவல்கள், தொடர்ந்தும் வெளியிடப்பட்டே வந்திருக்கின்றன. அப்போது தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க தொடக்கம், அனைவருமே இந்தக் குற்றச்சாட்டை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் குற்றச்சாட்டு உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், லசித் மலிங்கவின் இடத்திலிருந்து பார்த்தால், அதில் தவறேதும் கிடையாது.
லசித் மலிங்க, கடுமையான முழங்கால் உபாதைக்குள்ளாகியிருந்த போது, அவரது ஒப்பந்தத்தை இல்லாது செய்ததன் மூலம், அவருக்கான மருத்துவச் செலவுகளை, அவரே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டிய நிலைமையை, இலங்கை கிரிக்கெட் சபை ஏற்படுத்தியது.
பின்னர், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி, தனது திறமையை நிறைவேற்றிய பின்னரே, இலங்கை அணியில் அவருக்கான இடம் கிடைத்தது. இவ்வாறு, லசித் மலிங்கவின் கிரிக்கெட் வாழ்க்கையில், ஐ.பி.எல் தொடரின் பங்கு, மிக முக்கியமானது.
ஐ.பி.எல் போட்டிகளை அவர் அதிகம் விரும்புகிறார் என்று வைத்துக் கொண்டாலும், அவரை மதிக்காத, அவரைப் பராமரிக்காத, ஊடகங்கள் மூலம் அவரது பெயரைக் கெடுக்க நினைக்கின்ற இலங்கை கிரிக்கெட் சபைக்கு, எந்த விதத்தில் அவர் விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
இலங்கை கிரிக்கெட் சபை விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன, இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக, லசித் மலிங்க இருப்பார். உலகில் தோன்றிய, இருபதுக்கு-20 போட்டிகளின் சுப்பர்ஸ்டார்களில் ஒருவராக, லசித் மலிங்க இருப்பார்.
அவ்வாறானதொரு சுப்பர்ஸ்டாரை, இலங்கை கிரிக்கெட் சபை எவ்வாறு நடத்தியது என்பதில் தான், இந்த விடயம் அணுகப்பட வேண்டும். அவ்வாறு அணுகப்படும்போது, மலிங்கவை, இலங்கை கிரிக்கெட் சபை நடத்தியவிதம், எந்தவிதத்திலும் பொருத்தமற்றது என்பது தெளிவாகும்.
இத்தனைக்கும், லசித் மலிங்க மீது தவறுகளே இல்லை அல்லது அவர் பரிசுத்தமானவர் அல்லது பரிபூரணமானவர் என்பது இங்குள்ள விவாதமன்று. மாறாக, அவரை 'குழப்பவாதி" என நாட்டு மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சி தான், அதிக கவனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
15 minute ago
20 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
3 hours ago
6 hours ago