2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கடந்தவார களங்கள்... (செப்டெம்பர் 03 - 09)

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 13 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது
கடந்த ஐந்தாம் திகதி இங்கிலாந்து, தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆபிரிக்க அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியது. இரண்டு அணிகளும் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டன. முதற்ப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 45.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 182 ஓட்டங்களை பெற்றது. அலஸ்டையர் குக் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். கிரெய்க் கிவ்சுவேட்டார், கிறிஸ் வோகேஷ் ஆகியோர் தலா 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ரொபின் பீற்றர்சன் 10 ஓவர்கள் பந்துவீசி 37 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். டேல் ஸ்டைன், மோர்னி மோர்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.

பதிலளித்த தென் ஆபிரிக்க அணி ஆரம்ப மூன்று விக்கெட்களை இழந்து மிகவும் தடுமாறியது. ஐந்தாவது ஓவரில் 14 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்கள். இங்கிலாந்து பக்கமாக வெற்றி செல்லும் என்று பார்த்தால் ஹாசிம் அம்லா, ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆகியோரின் துடுப்புகள் இங்கிலாந்து பந்துகளை பதம் பார்த்தன. இந்த வருடத்தில் ஓட்டங்களை அள்ளி குவித்து வரும் இருவரும் மிக அபார இணைப்பட்டத்தை வழங்க வெற்றி கிடைத்தது. முறியடிக்கப்படாத 176 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றனர். ஓவர்கள் 16 மீதமிருந்த நிலையில் அம்லாவிற்கு சதம் அடிக்கும் வாய்ப்பை வில்லியர்ஸ் வழங்கி இருக்கலாம். ஹாசிம் அம்லா 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். ஏ.பி.டி. வில்லியர்ஸ் 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். 34.3 ஓவர்களில் 186 ஓட்டங்களை தென் ஆபிரிக்க அணி பெற்றுக் கொண்டது. 

பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். போட்டியின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஹாசிம் அம்லா தெரிவானார். இந்த வெற்றியின் மூலமாக தென் ஆபிரிக்க அணி இழந்த இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி ஏற்கனவே இழந்த முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்த தொடர் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் தரப் படுத்தல்களில் எப்படி இருந்தனவோ அதே நிலையிலேயே இப்போதும் உள்ளன.


பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய டுவென்டி டுவென்டி தொடர்
ஐந்தாம் திகதி இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் டுவென்டி டுவென்டி போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் அணி இலகுவான வெற்றியை இந்த போட்டியில் பெற்றுக் கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் டேவிட் வோர்னர் 22 ஓட்டங்களை கூடுதலான ஓட்டங்களாக பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் சொஹல் தன்வீர் 2.3 ஓவர்கள் பந்துவீசி 13 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். மொஹமட் ஹபீஸ், சைட் அஜ்மல், ரசா ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கம்ரன் அக்மல் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும், இம்ரான் நசீர் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பென் ஹில்பன்ஹோஸ், ஷேன் வொட்சன், பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக மொஹம்மட் ஹபீஸ் தெரிவானார்.

இரண்டாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. மிக விறு விறுப்பாக இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி சுப்பர் ஓவர் முறை மூலமாக வெற்றி பெற்று தொடரை தனதாக்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் மொஹம்மட் ஹபீஸ், நசிர் ஜெம்ஷட் ஆகியோர் தலா 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். கம்ரன் அக்மல் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பட் கம்மின்ஸ், மிச்சேல் ஸ்டார்க், ஷேன் வொட்சன், டானியல் கிறிஸ்டியன் அகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஜோர்ஜ் பெய்லி அவுஸ்திரேலிய அணி சார்பாக 42 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 33 ஓட்டங்களையும்  பெற்றனர். இறுதி இரண்டு பந்துகளில் வெற்றி பெற 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் பட் கம்மின்ஸ் அடித்த ஆறு ஓட்டம் போட்டியை சமநிலை படுத்தியது. ஆனாலும் இறுதிப் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சைட் அஜ்மல், அப்துல் ரசாக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். இறுதி ஓவரை அப்துல் ரசாக் வீசினார். அந்த ஓவரில் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அதன் பின் இரு அணிகளுக்கும் ஒவ்வொரு ஓவர் வழங்கப்பட்டது. முதலில் அவுஸ்திரேலிய அணி 11 ஓட்டங்களை ஒரு விக்கெட்டை இழந்து பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்து பௌன்சர் ஆக அமைய அகல பந்தாக ஓர் ஓட்டம் கிடைத்தது. அடுத்த பந்தில் ஓர் ஓட்டத்தைப் பெற்று பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆனாலும் அந்த ஓட்டத்தைப் பெறும்போது இலகுவான ரன் அவுட் முறையில் ஆட்டமிழப்பு செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தும் அதை தவற விடவே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுக் கொண்டது. போட்டியின் நாயகனாக மொஹம்மட் ஹபீஸ் தெரிவானார்.

நியூசிலாந்து அணியை வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது
பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. 365 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது நியூசிலாந்து அணி. ரொஸ் ரெய்லர் 113 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சிறப்பான சதம். வேகமாகவும் கூட அடிக்கப்பட்டது. 127 பந்துகளில் இந்த சதம் அடிக்கப்பட்டது. விக்கெட் காப்பாளர் ரூகர் வன் வைக் பின் வரிசை வீரகளுடன் இணைந்து நல்ல முறையில் துடுப்பெடுத்தாடினார். 71 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் மார்டின் கப்டில் 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். டக் பிரஸ்வெல் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இவர்களின் துடுப்பாட்டம் நியூசிலாந்து அணிக்கு மீள் வருகையை தந்தது. பந்து வீச்சில் பிரக்ஜன் ஓஜா ஐந்து விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். சகீர் கான் 2 விக்கெட்கள்.

பதிலளித்த இந்திய அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழக்க பலோ ஒன்னை தாண்டுமா என்ற சந்தேகம் நிலவ விராத் கோலியின் துடுப்பாட்டம் இந்திய அணிக்கு பெரிதும் கை கொடுத்தது. அவர்களுடன் இணைந்து ரெய்னா, டோனி ஆகியோருடைய துடுப்பாட்டம் கை கொடுக்க இந்திய அணி நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்ககைக்கு கிட்ட செல்ல முடிந்ததே தவிர தாண்ட முடியவில்லை. 353 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் ரிம் சௌதி மிக அபாரமாக பந்து வீசி இந்திய அணியை தடுமாற வைத்தார். அவரின் சுவிங் பந்துகள் இந்திய அணியின் விக்கெட்களை பதம் பார்த்தன. 7 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். இதுவே அவரின் சிறந்த பந்து வீச்சு பெறுதி. டௌக் பிரஸ்வெல் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 248 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அஷ்வின் இன் பந்து வீச்சு நியூசிலாந்து அணியை தடுமாற வைத்தது. எந்த வீரரும் 50 ஓட்டங்களை தொடவில்லை. கூடுதலான 41 ஓட்டங்களை ஜேம்ஸ் பிராங்ளின் பெற்றுக் கொண்டார். அஷ்வின் 5 விக்கெட்கள். உமேஷ் யாதவ், பிரக்ஜன் ஓஜா ஆகியோர் தள்ள இரண்டு விக்கெட்கள். 261 ஓட்டங்களுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நல்ல ஆரம்பத்தை எடுத்த போதும் பின்னர் விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட வெற்றி பெறுமா என்ற கேள்வி எழும்பியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு கை கொடுத்த விராத் கோலி, டோனி ஜோடி கை கொடுக்க இந்திய அணி வெற்றி பெற்றது. கோலி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும், டோனி 48 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என வெற்றி பெற்றது. பந்து வீச்சில் ஜீதன் பட்டேல் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார்.

போட்டி தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை விராத் கோலி போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

யுவராஜின் மீள் வருகைப்போட்டி கைவிடப்பட்டது
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டுவென்டி டுவென்டி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருந்த இந்தப் போட்டியில், புற்று நோயிலிருந்து அல்லது அதன் முதற்கட்ட நோயில் இருந்து முழுமையாக விடுபட்டு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளிற்குள் களமிறங்கினார். ஒரு வருடத்திற்கும் மேலான போராட்டத்தின் பின் மீண்டும் சர்வதேசப் போட்டிக்குள் களமிறங்கினார். ஆனாலும் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்திய ரசிகர்கள், கிரிக்கட் ரசிகர்கள் எல்லோருக்கும் ஏமாற்றமாக அமைந்து போனது. யுவராஜ் சிங்கை எதிற்பவர்கள் கூட அவரின் இந்த மீள் வருகைப் போட்டியை எதிர்பார்த்து இருந்தனர்.

விருதுகளில் சைட் அஜ்மலின் பெயர் நீக்கப்படமை சரியானது
சைட் அஜ்மல் சர்வதேசக் கிரிக்கெட் சபையின் விருது பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டமைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எதிர்ப்பு தெரிவித்து அவரை மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறு கோரி கடிதம் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் சபைக்கு வழங்கி இருந்தது. முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் சைட் அஜ்மல் இருந்த போதும், பெயர்கள் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அவரின் பெயர் இருக்கவில்லை. நான்கு பேரே இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதில் குமார் சங்ககார, வேர்ணன் பிலாண்டர், ஹாசிம் அம்லா, மைக்கல் கிளார்க் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். சைட் அஜ்மல் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுயாதீனமான குழுவே அதை தெரிவு செய்தது. அந்த முடிவுகளில் தாங்கள் தலையிட முடியாது என சர்வதேசக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. முதல் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் சபையின் 5 பேர் கொண்ட குழு தெரிவு செய்தது. அதன் பின் 32 பேர் வாக்களித்து இறுதிப் பட்டியல் தெரிவு செய்ப்பட்டு பின்னர் இறுதி நிகழ்வில் விருது பெறுபவர்கள் அறிவிக்கப்படுவர். இம்முறை இந்த விருது வழங்கும் வைபவமும் இலங்கையில் 15ஆம் திகதி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X