A.P.Mathan / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெறுதிகள், பெறுபேறுகள் என்பனவற்றைத் தாண்டி விளையாடிய விதம், வீரர்களின் திறமை என்று பார்க்கும்போது இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்று சொல்ல முடியாது. உலகச் சம்பியன் ஆகி இரண்டு வருடங்கள் கூட இன்னும் ஆகவில்லை. சொந்த நாட்டில் இப்படி விளையாடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை. இந்திய அணியானது இங்கிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தியது என்று சொல்வதற்கில்லை. மாறாக இங்கிலாந்து அணி, இந்திய அணி மீது அழுத்தங்களை செலுத்திய போதும் அதிர்ஷ்டவசமாக இந்திய அணி வென்றுவிட்டது என்றே சொல்லக் கூடியதாக உள்ளது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் இரண்டு வீரர்களே நல்ல முறையில் துடுப்பாடி ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். ரெய்னா, டோனி ஆகியோரே துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்கள். இந்திய அணியின் ஆரம்பம் மிக மோசமாக உள்ளது. செவாக் அணியால் தூக்கப்பட்ட நிலையில் மாற்று வீரர் யார் என்ற கேள்வி இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அஜிங்கையா ரெஹானே மூன்று போட்டிகளுடன் நிறுத்தப்பட்டு ரோஹித் ஷர்மாவிற்கு ஆரம்ப வீரர் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. நான்காவது போட்டியில் அவர் விளையாடிய விதம் அவரை ஆரம்ப வீரராக களமிறக்கலாம் என்ற நம்பிக்கையை தந்தபோதும் அடுத்த இறுதிப் போட்டியில் ஏமாற்றிவிட்டார். கெளதம் கம்பீரின் நிலையும் மோசமாகவே உள்ளது. ஓர் அரைச் சதம் மாத்திரமே. இப்படியே போனால் அணியில் இடம் கேள்விக் குறியாகிவிடும். விராத் கோலி ஒரு போட்டியில் மாத்திரமே சிறப்பாக செயற்பட்டார். இள வயது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி நல்ல முறையில் ஓட்டங்களைக் குவித்த பின்னர் அவர்களின் போம் இழக்கப்படும் போது யார் மீண்டு வருகிறார்களோ அவர்களே சிறந்த வீரர்களாக தொடர்வார்கள். அந்தக் கட்டம் இப்போது கோலிக்கு. மிகப் பெரிய அளவில் ஏமாற்றியவர் யுவராஜ் சிங். நல்ல மீல்வருகையினை அவரால் வழங்க முடியவில்லை. உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களை குவித்த போதும் சர்வதேசப் போட்டிகளில் தடுமாறுகிறார். முதல் மூன்று போட்டிகளிலும் சராசரியாக துடுப்பாடினாலும் இறுதி இரண்டு போட்டிகளும் மிக மோசமாக மாறிப்போனது. முதற்ப் போட்டியில் அரைச் சதம் அடித்தது மாத்திரமே அவரின் பங்கு. டோனி, ரெய்னா ஆகிய இருவருமே அணியைக் காப்பாற்றியவர்கள். டோனி வழமையான பாணி. ரெய்னா மிக சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடி தொடர்ச்சியாக நான்கு அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்டார். இருவரும் இந்திய அணியின் இன்னிங்சை நிறைவு செய்யும் துடுப்பாட்ட தூண்கள் என்றே சொல்ல வேண்டும். ரவீந்தர் ஜடேஜாவிற்க்கு இனி இந்திய அணியில் நிரந்த இடம் உண்டு. துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என மூன்று பக்கமும் மிக சிறப்பாக செயற்பட்டுள்ளார். இப்படியே தொடர்ந்தால் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலம். பந்து வீச்சில் அஷ்வினுக்கு இங்கிலாந்து தொடரே மிக மோசமானதாகப் போய்விட்டது. பந்து வீச்சில் அவர் நிறையவே செய்ய வேண்டியதுள்ளது. ஓட்டங்களையும் ஏராளமாக வழங்கி இருந்தார் என்பதும் முக்கிய பிரச்சினை. இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் நல்ல மீள் வருகை. சிறப்பாக பந்து வீசியிருந்தார். வேகம், நிதானம் என்பன நல்ல முறையில் தென்பட்டது. புவனேஸ்வர் குமார் நல்ல சகலதுறை வீரர் என்று சொல்லலாம். பந்துவீச்சாளர், துடுப்பாடக்கூடியவர். இவரின் பந்துவீச்சே முக்கியம். ஆனால் இவரைப் பாவிக்கும் முறையில்தான் கேள்விகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேய பந்து வீசி ஓவர்களை நிறைவு செய்வது வேகப் பந்து வீச்சுக்கு எந்தளவு பயன் தரும் என்பது புரியவில்லை. தோனியின் யுக்தி அதுவாக இருந்துள்ளது. முதற்ப் போட்டியில் அவரை சரியாக பாவிக்காததன் விளைவு சிறப்பாக தென்பட்டது. ஷமி அஹமட் சிறப்பாக பந்து வீசுகின்றார். ஆனாலும் அச்சுறுத்தும் வகையில் பந்து வீச்சு இருப்பது போல் தென்படவில்லை. இர்பான் பதான் குணமடைந்து அணிக்குள் மீள வந்தால் இவரின் இடம் பறி போகும் நிலையிலேயே உள்ளது. ஆக இந்திய அணி புதிய வேகப் பந்துவீச்சாளர்கள் மூவருடன் தொடரை நிறைவு செய்துள்ளது. இவர்களை தாண்டி அசோக் டின்டா முதற்ப் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்திய போதும் ஓட்டங்களை அதிகமாக கொடுக்கும் காரணத்தால் நீக்கப்பட்டார். அணிக்குள் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் அணிக்குள் இணைக்கப்பட்ட செற்றேஸ்வர் புஜாரவிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. இறுதிப் போட்டியில் கெளதம் கம்பீரின் இடம் அல்லது யுவராஜ் சிங்கின் இடம் அவருக்கு வழங்கப்பட்டு இருந்தால் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து இருக்கும். தொடரை கைப்பற்றிய பின்னரும் வீரர்களுக்கு வாய்ப்புக்கள் ஏன் வழங்கவில்லை என்பது டோனிக்கே வெளிச்சம்.7 hours ago
7 hours ago
ALEX Monday, 04 February 2013 11:26 AM
இந்தியாவிலும் worldcup win பண்ணும் போது இருந்த முக்கிய வீரர்கள்
1.செவாக்
2.சகீர் கான்
3.டெண்டுல்கர்
4.ஹர்பஜன் சிங்
5.பிரவீன் குமார்
finalல் உங்கள் டீம்க்கு எதிராக டோனி முன்னதாக இறங்கியது சரியான?
தயவு செய்து இந்தியாவை மட்டும் மட்டம் தட்டுவதை நிறுத்தவும் ,
நடுநிலமையாக விமர்சனம் செய்யம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago