2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையேயான சம்பளப் பிரச்சினை காரணமாக இந்திய கிரிக்கெட் தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இதன் காரணமாக, மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கும் இந்திய‌ கிரிக்கெட்டுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது.
 
மேற்கு இந்திய வீரர்கள், இந்தியாவுக்குச் செல்லும் முன்பே சம்பளப் பிரச்சினை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல் நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒருநாள் போட்டி முடிந்ததும், தொடரைக் கைவிட்டு மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. ஐந்தாவ‌து ஒருநாள் போட்டி, டெஸ்‌ட்‌ போட்டிக‌ள், ரி-20 போட்டி என்பன‌‌ கைவிட‌ப்ப‌ட்ட‌த‌னால் இந்திய‌க் கிரிக்கெட்டின் வ‌ருமான‌த்தில் அடிவிழுந்த‌து.
 
இழ‌ந்த‌ வ‌ருமானத்தை ஓர‌ள‌வேனும் மீட்ப‌த‌ற்காக‌ இல‌ங்கைக்கு அழைப்பு விடுத்த‌து இந்தியா. எதுவித‌ ம‌றுப்பும் தெரிவிக்காது உட‌ன‌டியாக‌ இல‌ங்கை ச‌ம்ம‌த‌ம் தெரிவித்த‌து. இதேவேளை மேற்கு இந்திய‌த்தீவுக‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டைப்பெறுவ‌த‌ற்காக‌ ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்போவ‌தாக‌ இந்தியா அறிவித்துள்ள‌து. கிரிக்கெட் தொட‌ர் கைவிட‌ப்ப‌ட்ட‌தால் சுமார் 400 கோடி இந்திய ரூபா‌ய் இழ‌ப்பு என‌ இந்தியா அறிவித்துள்ள‌து.
 
இந்தியாவுக்கு எதிரான‌ கிரிக்கெட் தொட‌ர் கைவிட‌ப்ப‌ட்ட‌த‌ற்கு வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் என‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் கிரிக்கெட் ச‌பை அறிவித்துள்ள‌‌து. ச‌ம்ப‌ள‌ ஒப்ப‌ந்த‌ப் பிர‌ச்சினையை பேசித் தீர்த்திருக்க‌லாம் என்ற‌ மேற்கு இந்திய‌ கிரிக்கெட் ச‌பையின் கூற்றை வீர‌ர்க‌ள் நிராக‌ரித்துள்ள‌ன‌ர். வீர‌ர்க‌ள் ச‌ங்க‌த் த‌லைவ‌ர் ஹிண்ட்ஸ்சுக்கும் வீர‌ர்க‌ளுக்கும் இடையேயான‌ பிர‌ச்சினைதான் இத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம். மேற்கு இந்திய‌ கிரிக்கெட் ச‌பை இத‌னை சுமுக‌மாக‌த் தீர்த்திருக்க‌லாம் என‌று இந்தியா க‌ருதுகிற‌து.
 
மேற்கு இந்திய‌தீவுக‌ளுட‌னான‌ கிரிக்கெட் தொட‌ர்க‌ளுக்கு ஐந்து வ‌ருட‌ங்க‌ள் த‌டைவிதிப்ப‌து, ஐ.பி.எல் தொட‌ர்க‌ளில் இருந்து மேற்கு இந்தியாதீவுக‌ள் வீர‌ர்க‌ளை நீக்குவ‌து போன்ற‌ அதிர‌டி முடிவுகளை‌ இந்திய‌ கிரிக்கெட் எடுக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌து. மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ ச‌மிக்ஞை‌யை இந்தியா வெளிப்ப‌டுத்தி உள்ள‌து. ஐ.பி.எல்லில் இருந்து வீர‌ர்க‌ளை வெளியேற்றுவ‌தில்லை என‌ இந்தியா தீர்ம‌னித்துள்ள‌‌து. மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்க‌ளுக்கான‌ ர‌சிக‌ர் ப‌ட்டாள‌ம் இந்தியாவில் உள்ள‌து. அத‌னை இழ‌க்க‌ இந்திய‌ கிரிக்கெட் விரும்ப‌வில்லை. மேற்கு இந்திய‌ கிரிக்கெட் வீர‌ர்க‌ளை இந்தியா பாதுகாத்துள்ள‌து. ஆகையினால் இத‌ற்கு சுமுக‌மான‌ முடிவைக்காணும் சூழ்நிலைக்கு மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.
 
இந்திய‌ கிரிக்கெட்டுட‌ன் ப‌கைத்தால் வ‌ருமான‌த்தில் பாதிப்பு ஏற்ப‌டும் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌ உண்மை. இந்தியா விரும்பிய‌துபோல‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு மேற்கு இந்தியாத்தீவுக‌ளுட‌ன் விளை‌யாடாம‌ல்விட்டால் அத‌ன் பொருளாதார‌ தாக்கத்தை ச‌மாளிப்ப‌து க‌டின‌ம். ஆகையினால் ஏதோ ஒரு வ‌ழியில் இந்தியாவைச் ச‌மாதான‌ப்ப‌டுத்த‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் முய‌ற்சி செய்யும். 
இந்திய‌ - பாகிஸ்தான் அர‌சிய‌ல் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ இந்திய‌ கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்குச் செல்வ‌தில்லை. ஐ.பி.எல்லில் விளையாட‌ பாகிஸ்தான் வீர‌ர்கள் அ‌னும‌திக்க‌ப்ப‌டுவ‌தில்லை. இத‌ன் கார‌ண‌மாக‌ ப‌கிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் வீர‌ர்க‌ளுக்கும் வ‌ருமான‌ இழ‌ப்பு ஏற்ப‌ட்டுள்ள‌து. இதேவேளை ஐ.பி.எல்லில் ப‌யிற்சியாள‌ர்க‌ளாக‌வும் வ‌ர்ண‌னையாள‌ர்க‌ளாக‌வும் பாகிஸ்தானின் முன்னாள் வீர‌ர்க‌ள் க‌ட‌மையாற்றுகின்ற‌ன‌ர்.
 
ச‌ம்ப‌ள‌ நிலுவை கார‌ண‌மாக‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளும் மிக‌வும் துன்ப‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆனால் எந்த‌நிலையிலும் இல‌ங்கைக்கு அவ‌மான‌ம் த‌ரும் வகையில் அவ‌ர்க‌ள் ந‌ட‌ந்து கொண்ட‌தில்லை. ச‌ம்ப‌ள‌ப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் வீர‌ர்கள்‌ நாடுதிரும்பிய‌தால் அந்த‌ இடத்தை நிர‌ப்புவ‌த‌ற்காக‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள், இந்தியாவுக்குச் சென்றுள்ள‌ன‌ர். திட்ட‌மிட‌ப்ப‌டாத‌ இந்த‌த்தொட‌ர் இல‌ங்கை வீர‌ர்க‌ள் மீது வ‌லிந்து திணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌‌து.
 
இந்தியாவுக்கு எதிரான‌ தொட‌ரை இல‌ங்கை வீர‌ர்க‌ள் எதிர்பார்க்க‌வில்லை. அனுப‌வ‌ம் மிக்க‌வ‌ரான‌ ச‌ங்க‌கார‌ த‌ன‌து ம‌ன‌தில் உள்ள‌வ‌ற்றை வெளிப்ப‌டையாக‌ அறிவித்துள்ளார். இந்திய‌ வீர‌ர்க‌ளுக்கு எதிராக‌ விளையாடுவ‌த‌ற்கு த‌யாராக‌ இல்லாத‌ நிலையிலேதான் இலங்கை‌ வீர‌ர்க‌ள் சென்றுள்ள‌ன‌ர். முத‌ல் மூன்று ஒருநாள் போட்டிக‌ளில் டோனி விளையாட‌மாட்டார். க‌டைசி இர‌ண்டு போட்டி ஒருநாள்  போட்டிக‌ளிலும் டோனி விளையாடுவார். இந்திய‌ அணி முழுப்ப‌ல‌த்துட‌ன் உள்ள‌து.
 
ம‌லிங்க‌, ர‌ங்க‌ண‌ ஹேர‌த், அஜ‌ந்த‌ மெண்டிஸ் ஆகியோர் அணியில் இல்லாததனால் ப‌ந்து வீச்சில் ச‌ற்று தள‌‌ர்வு உள்ள‌து. ச‌ங்க‌கார‌, க‌ள‌ம் இற‌ங்குவாரா என்ப‌து இன்ன‌மும் உறுதி செய்ய‌ப்ப‌ட‌வில்லை. எத்த‌கைய‌ இக்க‌ட்டான‌ நிலையிலும் மன உதியுட‌ன் விளையாடும் துணிவு இல‌ங்கை வீர‌ர்க‌ளிட‌ம் உள்ள‌து. ஆகையினால் ஒருநாள் தொட‌ரில் ப‌ர‌ப‌ர‌ப்புக்குப் ப‌ஞ்ச‌மிருக்காது. கிரிக்கெட்டின் வெற்றி என்ப‌த‌ற்கு அப்பால் உல‌க‌க்கிண்ண‌ கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணியில் இட‌ம் பிடிக்க‌ வேண்டும் என்ற‌ அவா ஒவ்வொரு வீரருக்கும் உள்ள‌து என்ப‌த‌னால் அதிக‌ ப‌ட்ச‌ திற‌மையை வெளிப்ப‌டுத்த‌ வேண்டிய‌ நெருக்க‌டி வீர‌ர்க‌ளுக்கு உள்ள‌து.
 
இங்கிலாந்து, மேற்கு இந்திய‌த்தீவுக‌ள் ஆகிய‌வ‌ற்றுக்கு எதிரான‌ தொட‌ர்களில் வெற்றி பெற்ற‌ ந‌ம்பிக்கையில் இந்தியா உள்ள‌து. பாகிஸ்தான், தென்.ஆபிரிக்கா ஆகிய‌வ‌ற்றுக்கு எதிரான‌‌ தொட‌ர்க‌ளில் தோல்விய‌டைந்த‌ இல‌ங்கை, இங்கிலாந்துக்கு எதிரான‌‌ தொட‌ரில் வெற்றி பெற்றுள்ள‌து.
 
இந்தியா, பாகிஸ்தான், இல‌ங்கை ஆகிய‌ நாடுக‌ள் இணைந்து 1996ஆம் ஆண்டு உல‌க‌க்கிண்ண‌ கிரிக்கெட் போட்டியை ந‌ட‌த்தின‌. அப்போது இல‌ங்கையில் குண்டு வெடிப்புக‌ள் அடிக்க‌டி ந‌டைபெறுவ‌த‌னால் பாதுகாப்பு இல்லை என‌ அவுஸ்திரேலியாவும் மேற்கு இந்திய‌த்தீவுக‌ளும் இல‌ங்கையில் விளையாட ம‌றுப்புத் தெரிவித்த‌ன‌. இல‌ங்கையில் எந்த‌வித‌மான‌ பாதுகாப்பு அச்சுறுத்த‌லும் இல்லை என்ப‌தை வெளிப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ இந்திய‌ - பாகிஸ்தான் வீர‌ர்க‌ள் இணை‌ந்து இல‌ங்கையில் விளையாடினார்க‌ள்.
 
இந்திய‌ நாடாளும‌ன்ற‌ தேர்த‌ல் கால‌த்தில் ஐ.பி.எல்லுக்கு பாதுகாப்பு த‌ர‌முடியாது என‌ ம‌த்திய‌ அர‌சாங்க‌ம் அறிவித்த‌த‌னால், 2009ஆம் ஆண்டு ஐ.பி.எல்லின் சில‌போட்டிக‌ள் தென். ஆபிரிக்காவில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌. அப்போது இந்திய, தென். ஆபிரிக்க‌ கிரிக்கெட் உறவுக‌ள் மிக‌ இறுக்க‌மாக‌ இருந்த‌ன‌. 2013ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இந்திய‌ கிரிக்கெட் அணி, தென்ஆபிரிக்காவில் விளையாடும் போட்டிக‌ளின் அட்ட‌வ‌ணை ஒருத‌லைப்பட்ச‌மாக‌‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து என‌க் குற்ற‌ம் சாட்டிய‌து இந்தியா. அத‌ன் கார‌ண‌மாக‌ மேற்கு இந்திய‌த்தீவுக‌ளை த‌னது நாட்டுக்கு அழைத்து இர‌ண்டு டெ‌ஸ்ட் போட்டிகளை நடத்தியது.
 
தென்ஆபிரிக்காவுடனான முறுகல் காரணமாக சச்சினின் 200ஆவது டெஸ்ட்போட்டி அங்கு நடப்பதை இந்தியா விரும்பவில்லை. ஆகையினால் மேற்கு இந்தியத்தீவுகளை தனது நாட்டுக்கு அழைத்து சச்சினின் 200ஆவது போட்டியை நடத்தி திருப்தியடைந்தது. இப்போது மேற்கு இந்தியத்தீவுகள் தொடரைக் கைவிட்டதனால் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இலங்கையை அழைத்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X