2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையின் வெற்றிகரமான உலகக்கிண்ணம் - 1996

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கோபிகிருஷ்ணா கனகலிங்கம்

வில்ஸ் உலகக்கிண்ணம் என்றழைக்கப்பட்ட 1996ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரானது 6ஆவது உலகக்கிண்ணமாக அமைந்தது. இந்திய, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து கூட்டாக நடாத்திய இந்த உலகக்கிண்ணம், இலங்கை அணியால் வெற்றிகொள்ளப்பட்டது. இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டது என்பதற்கப்பால், இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றும் தொடராக இது அமையும். இலங்கை அணி உலகக்கிண்ணத்தை இதுவரை வென்றுள்ள ஒரே சந்தர்ப்பமாகவும் இது காணப்படுவதால் (டுவென்டி டுவென்டி போட்டிகளின் உலகத் தொடர் உலகக்கிண்ணம் என்றழைக்கப்படுவதில்லை. அவை 'உலக டுவென்டி டுவென்டி' என்றே அழைக்கப்படுகின்றன.) அந்தத் தொடரை மீட்டுப் பார்க்கலாம்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஆறாம் (1996) ஆண்டு உலகக்கிண்ணத்திற்கு முன்னர் இலங்கை, அரையிறுதிப் போட்டிகளுக்குக் கூடத் தகுதிபெற்றதில்லை. இதற்கு முன்னர் 25 உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றி, நான்கே நான்கு போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றிருந்தது. இருபது போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி வெற்றி தோல்வியற்ற முடிவினையும் தந்திருந்தது. 

இந்தத் தொடரில் இலங்கைக்கு அர்ஜூன ரணதுங்க என்ற பலமான, தன்னம்பிக்கைமிக்க தலைவர் காணப்பட்டாலும், இலங்கைக்கு வெற்றிவாய்ப்பென்பது அதிகமானதாக இருந்ததாகக் கருதப்பட்டிருக்கவில்லை. அத்தோடு, இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகளைக் காரணம் காட்டி அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இலங்கைக்கு வந்திருக்கவில்லை. தவிர, இலங்கையின் குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய பலமான அணிகளும் இடம்பெற்றிருந்தன. இவையெல்லாவற்றையும் தாண்டி இலங்கை அணி எவ்வாறு உலகக்கிண்ணத்தை வென்றது?

இலங்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அரவிந்த டீ சில்வா-வின் துடுப்பாட்டமும், சனத் ஜெயசூரியவின் அதிரடித் துடுப்பாட்டமும், சனத் ஜெயசூரிய உட்பட சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சும் கருதப்படுகிறது.

ஆனால், உலகக்கிண்ணம் ஆரம்பிக்கும் போது சனத் ஜெயசூரிய 99 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி, 19.73 என்ற சராசரியுடன், 74.27 என்ற அடித்தாடும் வீதத்தைக் கொண்டிருந்தார். ஒரு சதமும், ஒன்பது அரைச்சதங்களும் இதில் உள்ளடங்கும். அரவிந்த டீ சில்வா 175 போட்டிகளில் 3 சதங்களுடன் 31.23 என்ற சராசரியைக் கொண்டிருந்தார். ஆகவே, இந்த நட்சத்திரங்களுக்கும் அவர்களது கிரிக்கெட் வாழ்வை மாற்றிய தொடராக 1996 உலகக்கிண்ணமே அமைந்தது.

இத்தொடரில் இலங்கையின் முதலாவது போட்டி பெப்ரவரி 17ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கெதிராக இடம்பெறவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அவுஸ்திரேலியா, இலங்கைக்கு வருவதைத் தவிர்க்க, அந்தப் போட்டியில் இலங்கை விளையாடாமலேயே வெற்றிபெற்றது. பலம் குறைவான சிம்பாப்வே அணி 229 ஓட்டங்களை இலங்கைக்கு இலக்காக வழங்க, இலங்கை அணி - சனத் ஜெயசூரியவையும், களுவிதாரணவையும் ஆரம்பத்திலேயே இழந்து 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அசங்க குருசிங்கவும், அரவிந்த டீ சில்வாவும் சிறப்பாக ஆடி இலங்கைக்கு 6 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இலங்கையில் அடுத்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பங்குபற்றாமல் விட, அந்தப் போட்டிக்கான வெற்றியும் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றது.

இலங்கையின் நான்காவது போட்டி மிக முக்கியமானதாக அமைந்தது. வெற்றிபெறுவதற்கு அதிகமான வாய்ப்புக்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய அணியை டெல்லியில் இலங்கை சந்தித்திருந்தது. சச்சின் டெண்டுல்கரின் மிக அற்புதமான 137 ஓட்டங்களின் துணையோடு இந்திய அணி 271 ஓட்டங்களைக் குவித்தது. இதற்கு முன்னர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 271 ஓட்டங்களை விட அதிகமான போட்டிகள் வெற்றிகரமாகத் துரத்தியடிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் 22 தடவைகள். இலங்கை செய்தது ஒரே ஒரு தடவை. யாருக்கெதிராக? சிம்பாப்வேயிற்கெதிராக.
ஆனால், 1996 உலகக்கிண்ணமென்பது இதற்கு முன்னர் செய்யாதவற்றை இலங்கை செய்வதாகவே அமைந்திருந்தது. அதை இப்போட்டியில் செய்தது இலங்கை. சனத் ஜெயசூரியவின் அதிரடி 79 ஓட்டங்கள், ஹஷான் திலகரட்ண, அர்ஜூன ரணதுங்க இருவரினதும் ஆட்டமிழக்காத முறையே 70, 46 ஓட்டங்கள், களுவிதாரண, அரவிந்த டீ சில்வாவின் அதிரடி இருபதுகள் என்பன இலங்கைக்கு வெற்றியை வழங்கின. மனோஜ் பிரபாகரின் 4 ஓவர்களில் 47 ஓட்டங்கள் அடித்து விளாசப்பட்டிருந்தன.

குழுநிலைப் போட்டிகளில் இலங்கையின் கடைசிப் போட்டியாக கென்ய அணிக்கெதிராக கண்டியில் இடம்பெற்ற போட்டி அமைந்தது. ஏற்கனவே விளையாடிய 2 போட்டிகளில் (2 போட்டிகளில் விளையாடாமல் வெற்றி கிடைத்திருந்தது) இலங்கை அணி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியிருக்க, அவற்றிற்கெல்லாம் மகுடம் வைப்பது போல் இப்போட்டி அமைந்திருந்தது. அதுவரை காலமும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாக பாகிஸ்தான் அணிக்கெதிராக இங்கிலாந்து பெற்றுக்கொண்ட 363 ஓட்டங்கள் காணப்பட்டன. அதை முறியடித்த இலங்கை, இப்போட்டியில் கென்யாவிற்கெதிராக 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 398 ஓட்டங்களைக் குவித்தது. அரவிந்த டீ சில்வா 115 பந்துகளில் 145 ஓட்டங்களைக் குவிக்க, அசங்க குருசிங்க 103 பந்துகளில் 84 ஓட்டங்களையுட், அர்ஜூன ரணதுங்க 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும், சனத் ஜெயசூரிய 27 பந்துகளில் 44, களுவிதாரண 18 பந்துகளில் 33 ஓட்டங்கள் எனக் குவித்திருந்திருந்தனர். கென்ய அணி 254 ஓட்டங்களை மாத்திரம் பெற, இலங்கை அணி 144 ஓட்ட வெற்றியுடன் காலிறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்தது.

காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை சனத் ஜெயசூரியவின் அதிரடி 82 ஓட்டங்களின் துணையோடு 5 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி, அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை கொல்கத்தாவில் சந்திக்க ஆயத்தமாகியது. ஏற்கனவே இந்தியாவை டெல்லியில் வீழ்த்தியிருந்த போதிலும், ஏறத்தாழ இலட்சம் பேர் நேரடியாகப் பார்வையிடப்போகும் போட்டியில், அதுவும் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவது சற்றுக் கடினமானது தான்.

இந்த அழுத்தங்களெல்லாம் போதாது என்று, ஆடுகளமும் இலங்கைக்குத் தலையிடியை வழங்கியது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றால் முதலில் துடுப்பெடுத்தாடுவதா இல்லை களத்தடுப்பில் ஈடுபடுவதா என்ற குழப்பம் காணப்பட்டது. இலங்கை நாணயச்சுழற்சியில் தோல்வியடைய, இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இலங்கை அணியின் முதலிரு விக்கெட்டுக்களும் இலங்கை ஓர் ஓட்டத்துடன் காணப்படும் போது வீழ்த்தப்பட, மூன்றாவது விக்கெட்டுக்காக 34 ஓட்டங்கள் பகிரப்பட்டன. அதில் 33 ஓட்டங்களை அதிரடியாக விளாசியவர் அரவிந்த, மறுபுறத்தில் குருசிங்க ஓர் ஓட்டத்துடன் 3ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அரவிந்த டீ சில்வா 47 பந்துகளில் 66 ஓட்டங்களை விளாச, றொஷான் மஹாநாம 58 ஓட்டங்களையும், அர்ஜூன 35 ஓட்டங்களையும், ஹஷான் திலகரட்ண 32 ஓட்டங்களையும் பெற்றதோடு, சமிந்த வாஸ் இறுதி நேரத்தில் 16 பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்று இலங்கை 251 ஓட்டங்களைப் பெற உதவினார்.

252 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்த போதிலும், சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக ஆட, இந்திய அணி 98 ஓட்டங்களுக்கு விரைந்தது. இலங்கை தோல்வியடைந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட, சனத் ஜெயசூரியவின் பந்துவீச்சில் களுவிதாரணவால் ஸ்ரம்ப் செய்யப்பட்டு சச்சின் ஆட்டமிழந்தார். சச்சினோடு சேர்த்து 7 விக்கெட்டுக்கள் 32 ஓட்ட இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. இந்திய அணி தோல்வியடைவது உறுதி என்பது வெளிப்பட, இந்திய இரசிகர்கள் இலங்கை வீரர்கள் மீது பழங்களாலும், தண்ணீர்ப் போத்தல்களாலும் வீசியெறிந்ததோடு, மைதானத்தில் பார்வையாளர் பகுதியின் ஒரு பகுதியையும் தீயிட்டனர். மீண்டும் ஆரம்பிக்கப்பட முயற்சிக்க, மீண்டும் தாக்குதல் தொடங்க, இலங்கை அணிக்கு வெற்றி கிடைத்தது. இலங்கை அணி தனது முதலாவது உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அதுவரை காலமும் சிங்கக்குருளைகளாக இருந்தவர்கள் திடீரென சிங்கங்களாகக் கருதப்படத் தொடங்கினர். அதுவரை காலமும் கடைக்குட்டிகளாக இருந்தவர்கள், திடீரென மதிக்கப்படும் அணியாக மாறினர். ஆனாலும், மார்க் ரெய்லர், மார்க் வோ, றிக்கி பொன்டிங், ஸ்டீவ் வோ, மைக்கல் பெவன், இயன் ஹீலி, ஷேன் வோண், கிளென் மக்ரா, டேமியன் பிளமிங் ஆகியோரைக் கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புக்கள் உள்ளதெனக் கருதப்பட்டது.

லாகூரில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது. இதற்கு முன்னர் இடம்பெற்ற 5 உலகக்கிண்ணங்களில், இறுதிப் போட்டிகளில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்ற அணிகளின் எண்ணிக்கை? பூச்சியம். இப்போட்டிக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய அணியை இலங்கை எதிர்கொண்ட 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளினதும் முடிவு? அவுஸ்திரேலியாவிற்கு வெற்றி. ஆனால், இது அர்ஜூன ரணதுங்கவின் அணி. ஏற்கனவே சொன்னது போல, இதற்கு முதல் செய்யாதவற்றை செய்து, தங்களை நிரூபித்து வந்த அணி. மற்றொரு சவாலுக்கும் தயாரானது.

ஒரு விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய அணி, மார்க் ரெய்லர், றிக்கி பொன்டிங் என இருவரின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் மிளிர, இலங்கை அழுத்தத்திற்குள்ளாகியது. ஆனால், அரவிந்த டீ சில்வாவின் பந்துவீச்சில் மார்க் ரெய்லர் ஆட்டமிழந்த, அதன் பின்னர் இலங்கை அணி மீண்டும் சிறப்பாகப் பந்துவீசியது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற்றது.

அரையிறுதியைப் போலவே, இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் சறுக்கினர் சனத் ஜெயசூரிய ரண் அவுட் முறையில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்களுடன் அழுத்தத்தில் இலங்கை. அரையிறுதிப் போட்டியில் வேகமான அரைச்சதம் பெற்றுத் தனது தயார்படுத்தலை மேற்கொண்ட அரவிந்த டீ சில்வா, இறுதிப் போட்டியில் முழுத்திறனை வெளிப்படுத்தினால். அவுஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை ஆடுகளத்தின் இருபுறமும் அடித்தாடிய அவர், இறுதிவரை ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களைப் பெற்றார். அசங்க குருசிங்க 65 ஓட்டங்களைப் பெற்றதோடு, அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றார். அத்தோடு, வெற்றிக்கான ஓட்டங்களையும் அவரே அடித்தார். வரலாறு உருவாகியது. கத்துக்குட்டிகள் சம்பியன்களானார்கள். ரொனி கிரெய்க்-இன் 'லிட்டில் லயன்ஸ்' உண்மையில் கர்ச்சிக்கத் தொடங்கினார்கள். இலங்கையின் கிரிக்கெட் வரலாறே மாற்றி எழுதப்பட்டது.

அதுவரை காலமும் அரையிறுதிக்குத் தானும் தகுதிபெறாத இலங்கை, இத்தொடரை வெற்றிகொண்டிருந்தது. அடுத்த உலகக்கிண்ணத்தில் பரிதாபமாக முதற்சுற்றோடு வெளியேறினாலும், அடுத்த உலகக்கிண்ணத்தில் அரையிறுதிக்கும், அதற்கடுத்த இரண்டு உலகக்கிண்ணங்களில் இறுதிப்போட்டிக்கும் இலங்கை தகுதிபெற்றது. இம்முறை இன்னொரு படி மேற்சென்று, சம்பியன்களாவார்களா? வலன்டைன்ஸ் தினத்தன்று, இலங்கை நேரப்படி காலை 3.30 இற்கு நியூசிலாந்திற்கெதிரான போட்டியோடு அதற்கான விடைகள் கிடைக்கப்பெறத் தொடங்கும். 'விஸ்டன் ஸ்ரீ லங்கா' உங்களுக்கான சுவையான தகவல்களையும் தந்துகொண்டிருக்கும். (நன்றி : விஸ்டன் ஸ்ரீ லங்கா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X