2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

'நீரியல்வளப் பண்ணை அமைப்பது தொடர்பில் அப்பிரதேச மக்களின் கருத்தை கவனத்திற்கொள்ள வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 31 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணிப் பிரதேசத்தில் நீரியல்வளப் பண்ணை அமைப்பது தொடர்பில்  அப்பிரதேச மக்களின் கருத்தையும் அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டுமென்பதுடன், இப்பண்ணை அமைப்பதன் காரணமாக குறித்த பிரதேசத்தின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமெனக் கருதி மக்கள் ஏற்றுக்கொள்ளாத திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்;டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

4,000 மில்லியன் ரூபாய் செலவில் 1,200 ஏக்கர் காணியில் பனிச்சங்கேணி வாவியோரத்தில் இப்பண்ணையை கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சின் ஏற்பாட்டில்  அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 
தட்டுமுனை கிராம அபிவிருத்திச் சங்கத்துக்காக  ஒரு இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களை கையளிக்கும் நடவடிக்கை, அங்கு சனிக்கிழமை (30) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'பனிச்சங்கேணிப் பிரதேசத்தில் நீரியல்வளப் பண்ணை அமைப்பதன் மூலம் வாவியோரத்திலுள்ள கண்டல் தாவரங்கள் அழியும் அபாயம் உள்ளது. அது மட்டுமின்றி, பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பனிச்சங்கேணி வாவியுடன் கலந்தால், வாவி அசுத்தமடையும்.

இதன் காரணமாக நன்னீர் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் குறைவடையுமென மக்கள் அஞ்சுகின்றனர். வாகரைப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் பல குடும்பங்கள் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரத் தொழிலாகக்; கொண்டுள்ளன. இத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்' என்றார்.  
 
'மேலும் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள இப்பண்ணையில் 20 -30 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய வேண்டுமென்ற நிலையில், அந்தளவு நிதியை முதலீடு செய்வதற்குரிய வசதி அப்பிரதேச மக்களிடம் இல்லை. இத்திட்டம் உள்ளூர் பண்ணையாளர்களை ஊக்குவிப்பதாக அமையாது. இது முதலீட்;டாளர்களை மாத்திரமே ஊக்குவிக்கும் திட்டமாக அமையுமெனவும் மக்கள் கருதுகின்றனர்' என்றார்.
 
'கடந்த காலத்தில் வட்டவானில் அமைக்கப்பட்ட இறால் பண்ணையில் பிரதேச பண்ணையாளர்கள் இலாபம் அடைந்ததைவிட, முதலாளி வர்க்த்தினர் அதிக இலாபம் ஈட்டிச் சென்றுள்ளனர். இது கடந்தகால அனுபவம். இதன் காரணமாகவே இத்திட்டத்தை மக்கள் எதிர்க்கின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .