2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

13ஐ அமுல்படுத்த மாகாண சபை தேர்தலை நடத்தவும்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

13ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடடியாக நடத்த வேண்டும்  என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதற்குப் பிற்பாடு கடந்த ஒரு மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியான இராஜதந்திர அழுத்தத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

“குறிப்பாக மனித உரிமை ஆணைக்குழுவினுடைய அழுத்தங்கள்,  இலங்கை அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் தொடர்பான செயல்வடிவங்களை முன்நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

“அதே நேரத்தில், வெளிநாடுகள் சம்பந்தமான இராஜதந்திரச் செயற்பாட்டில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.  13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் உள்ளமையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது. புலம்பெயர் சக்திகளுடன் ஜனாதிபதி பேசப்போவதாகக் கூறியிருக்கிறார்.

“இவ்வாறான விடயங்களை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசு சம்பந்தப்பட்ட விடயத்தில் சில மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

“இலங்கை அரசின் இந்த மாற்றங்கள், அவதானிப்புகள் ஊடாக சிறுபான்மைத் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும், சிறுபான்மை மக்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட விடயத்திலும்  ஜனநாயக ரீதியான செயற்பாட்டிலும் மாற்றங்களைக் கொண்டுவந்து சிறுபான்மையினரினரை வெல்லவேண்டும்.

“அத்தோடு, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துவதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புகளை நல்கி, மாகாண சபையின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .