2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

'எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கு சுதந்திரம் இல்லை'

Gavitha   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா


எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியாத நிலையே இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் டுபாயில் பணிபுரிந்துவிட்டு வந்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் தம்மிடம் முறையிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


'இன்று, டுபாயில் பணி புரிந்துவிட்டு இலங்கை வந்த கொக்கட்டிச்சோலை, 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தாமோதரம் பாஸ்கரன் என்ற குடும்பஸ்தர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் தொடர்பில், அவரது கொக்கட்டிச்சோலை வீட்டுக்கு புலனாய்வுத்துறையினர் வந்து விசாரணை செய்துவிட்டு சென்றுள்ளனர். விடுதலைப்புலி என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இது இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கமுடியாது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.


இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தின்போதும் சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர்களை கைது செய்யும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவது வேதனைக்குரிய விடயமாகும்.


இந்நாட்டில் சிறுபான்மை சமூகத்துக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வரையிலும் சுதந்திர காற்றினை சுவாசிக்கமுடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.


நாட்டுக்கு அனைவரையும் திரும்பி வருவமாறு புதிய அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், தொழில் புரிந்துவிட்டு வந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டதானது, தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .